சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் மோதல்: வன்முறை களமான டெல்லியில் நடந்தது என்ன…?

Read Time:4 Minute, 13 Second

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஷாகின் பாக் பகுதியில் போராட்டம் நடக்கிறது. இதற்கிடையே டெல்லியின் தென்கிழக்கு பகுதியான ஜாப்ராபாத் மெட்ரோ ரெயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு முதல் இஸ்லாமிய பெண்கள் 500-க்கும் மேற்பட்டோர் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மெட்ரோக்கள் மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பெண்கள் கைகளில் தேசியக்கொடி ஏந்தியும், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிற்பகலில் மஜ்பூர், ஜாப்ராபாத் ஆகிய பகுதிகளில் சிஏஏ ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ஊர்வலமாக வந்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதன்பின் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

இந்த சூழலில் இன்று 2-வது நாளாக மஜ்பூர், ஜாப்ராபாத், சாந்த்பாக், கர்தாம்பூரி ஆகிய பகுதிகளில் சிஏஏ எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களும் மோதிக்கொண்டனர். இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டுள்ளனர். சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி, தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று கூட்டத்தினர் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் காணப்படுவதாலும், மீண்டும் வன்முறை நிகழ வாய்ப்பு இருப்பதாலும் வடகிழக்கு டெல்லி பகுதியான மஜ்பூர், கர்தாம்பூரி, சாந்த் பாக், தயால்பூர் ஆகிய இடங்களில் போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

போலீஸ் அறிவிப்பு

டெல்லி போலீஸ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்கு டெல்லி மாவட்டத்தில் குறிப்பாக மஜ்பூர், கர்தாம்பூரி, சாந்த் பாக், தயால்பூர் ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

4 பேருக்கு மேல் சேர்ந்து செல்லக்கூடாது. வடகிழக்கு டெல்லியில் உள்ள மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டுகோள் விடுக்கிறோம். வதந்திகளை நம்ப வேண்டாம். பதற்றமான எந்தவிதமான காட்சிகளையும் ஊடகங்கள் வெளியிடவேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். டெல்லியில் முழுமையாக அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அமைதியை காக்க வேண்டும் என கோரிக்கையை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.

மோதல் சம்பவங்களில் போலீசார் ஒருவரும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்து உள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். டொனால்டு டிரம்ப் வருகையை ஒட்டி இதுபோன்ற கலவரம் தூண்டப்பட்டுள்ளது எனவும் இதுதொடர்பாக விசாரணை நடப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிப்பதாக தி இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.