கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம்… புதிய எச்சரிக்கை

Read Time:3 Minute, 44 Second

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவும் ஆபத்து இருப்பதாகவும், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் உகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், தற்போது அந்நாட்டை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது.

இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன செய்வதறியாது திகைத்து வருகிறது. இந்நிலையில், சீனாவில் இன்று வரை கரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2663 ஆக அதிகரித்துள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 77,000 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகள் 508 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சீன அரசால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது பெரும் சிக்கலாக நாளுக்கு நாள் மாறி வருகிறது. சீனாவுக்கு அடுத்தார்போல், தென் கொரியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. அங்கு 8 பேர் உயிரிழந்துள்ளார்கள். 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர 30 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அந்த நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் பல நாடுகள் சீனாவுக்கு யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளன.

இந்த சூழலில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை சீன அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் மக்களுக்கு மட்டுமல்ல சமூகத்திலும், பொருளாதாரத்திலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த அழுத்தம், பாதிப்பு குறுகிய நாட்களுக்குத்தான். இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். ஆதலால் சீனாவில் கடந்த 1949-ம் ஆண்டுக்குப் பின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலையை அறிவிக்கிறோம் என சீன அரசு தெரிவித்தது. சீனாவை தாண்டியும் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவது புதிய அச்சமாக எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவும் ஆபத்து இருப்பதாகவும், உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழப்பவர்களின் விகிதம் ஒன்றிலிருந்து இரண்டு சதவீதம் வரை இருக்கலாம் என கூறப்பட்டாலும், சரியான தகவல்கள் இன்னும் தெரியவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் கொரானோ தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, “கவலைக்குரியது” என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.