டெல்லியில் ஆயுதம் தாங்கிய 1000 போலீசார் குவிப்பு… டெல்லி-உ.பி. எல்லை கண்காணிப்பு

Read Time:4 Minute, 4 Second

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே டெல்லி ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.

இந்த சூழலில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவானவர்களும் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள். வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. போலீஸ் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தது.

நேற்றும் இதுபோன்ற மோதலால் வன்முறை நேரிட்டது. டெல்லியே கலவரப்பூமியாக காட்சியளித்தது.
இந்த கலவரத்தில் தலைமை காவலர் உள்ளிட்ட 7 பேர் பலியானார்கள், 48 போலீசார், பொதுமக்களில் 98 பேர் காயமடைந்தனர் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வடகிழக்கு டெல்லியில் நிலவும் பதற்றம் காரணமாக அங்கு வரும் மார்ச் மாதம் 24-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே டெல்லி கலவரம் குறித்து ஆலோசிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவசரக் கூட்டத்தை கூட்டினார். இதில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், போலீஸ் ஆணையர் அமுல்யா பட்நாயக், காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா, பா.ஜனதா மாநில தலைவர் மனோஜ் திவாரி, ராம்விர் பிதூரி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்கு பின் வெளியே வந்த கெஜ்ரிவால் பேசுகையில், கலவரம் நடந்த பகுதியில் அதை கட்டுப்படுத்த போதுமான அளவு போலீசார் இல்லை. எந்த விதமான உத்தரவும் இல்லாமல் போலீசாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து உள்துறை அமைச்சருடன் பேசினேன். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். அவசியம் ஏற்பட்டால் வெளியூர் நபர்கள் யாரும் உள்ளே வராத அளவுக்கு சீல் வைக்கப்படும்” என தெரிவித்தார்.

போலீஸ்-எம்.எல்.ஏ. ஒருங்கிணைப்பை மேம்படுத்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தவிர சமூகத்தின் அனைத்து மதங்களை சேர்ந்த பிரதிநிதிகள், மதிப்பு மிக்க குடிமகன்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு அமைதி மற்றும் சமாதான குழு அமைத்து வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி-உ.பி.-அரியாணா எல்லை பகுதிகளிலிருந்து சமூக விரோத சக்திகள் ஊடுருவாமல் தடுக்க கண்காணிப்பு கூட்டப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி போலீஸார் எல்லையில் சோதனை முறையை நடைமுறைப்படுத்தி உள்ளனர். குறிப்பாக ஷாஹீன்பாக் போராட்டம் குறித்த உச்ச நீதிமன்ற விசாரணை வரவிருக்கும் நிலையில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். டெல்லி போலீஸின் ஆயுதம் தாங்கிய ஆயிரம் பேர் கொண்ட படை வன்முறை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.