டெல்லி வன்முறை: சர்வதேச அளவில் இந்தியாவிற்கு அவதூறு ஏற்படுத்த சதிதிட்டம்

Read Time:4 Minute, 1 Second

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வந்துள்ள நிலையில் டெல்லியில் ஏற்பட்டுள்ள வன்முறைக்கு பின்னால் ‘சர்வதேச அளவில் இந்தியாவிற்கு அவதூறு ஏற்படுத்துவதற்கான சதிதிட்டம்’ உள்ளது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக டெல்லியில் வன்முறை வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டு உள்ளது. இதுபோன்ற சம்பவங்களை நரேந்திர மோடி அரசு பொறுத்துக்கொள்ளாது எனவும் குறிப்பிட்டார்.

டெல்லி வடகிழக்குப் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் கலவரம் ஏற்பட்டது. சிஏஏ ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் கற்களை வீசித் தாக்கி, வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் நிலவும் பதற்றம் காரணமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.

மேலும், வடகிழக்கு மாவட்டத்தில் வரும் மார்ச் மாதம் 24-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸ் உத்தரவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு வந்துள்ள நிலையில் இந்த கலவரம் வெடித்துள்ளதற்கு பின்னால் மிகப்பெரிய தூண்டல் உள்ளது என கூறப்படுகிறது.

இதுபற்றி மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பேசுகையில், “வன்முறையின் பின்னால் இருப்பவர்களை நான் எச்சரிக்கிறேன்… நரேந்திர மோடி அரசாங்கம் வன்முறையை சகித்துக்கொள்ளாது. எங்கள் அரசாங்கம் தீ வைப்பு மற்றும் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது தேவையான கடுமையான நடவடிக்கை எடுக்கும். வன்முறையின் எந்தவொரு வடிவத்தையும் எங்கள் அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது,” எனக் குறிப்பிட்டார்.

டெல்லி காவல்துறை பொறுப்புடன் செயல்படுவதால் தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கு நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார்.

டெல்லியில் வன்முறை வேண்டுமென்றே செய்யப்பட்டது என்றும் குற்றம் சாட்டினார். மத்திய அரசு பொறுமையாக உள்ளது. குடியுரிமை சட்டத்தினால் 130 கோடி இந்தியர்களுக்கு எந்தஒரு பாதிப்பும் இல்லை என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்பது எங்களுக்கு தெரியும். இது பாகிஸ்தானுக்கோ, வங்காளதேசத்திற்கோ அல்லது எந்த மதத்துக்கோ அல்லது பிராந்தியத்துக்கோ எதிரானது கிடையாது. இதைத் தவிர்த்து அவர்கள் மோடி அரசாங்கத்திற்கு அவதூறு ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் மற்றும் நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்துகிறார்கள் இது மிகவும் தவறானது.

நாட்டின் கவுரவத்தை சேதப்படுத்த சதி செய்பவர்களே வன்முறைக்கு காரணம். விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன, அதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். குடியுரிமை சட்டத்திற்கு ஒரு முக்கியமான பிரச்சினையாகும், சில அரசியல் கட்சிகள் மற்றும் எதிர்ப்பாளர்கள் அதை மதத்துடன் இணைக்கிறார்கள். நாங்கள் எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம், நிதானத்துடன் செயல்படுகிறோம் என கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.