தென்கொரியா, ஈரான், இத்தாலிக்கு செல்வதை தவிர்க்கவும் மத்திய அரசு அறிவுரை

Read Time:2 Minute, 12 Second

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவிற்கு அடுத்தப்படியாக ஈரான், தென்கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அங்கு நோய் தாக்கியவர்கள் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, அந்த நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு மத்திய அரசு இந்தியர்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கொரியா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அவசியம் இல்லாத பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். கடந்த 10–ம் தேதிக்கு பிறகு மேற்கண்ட நாடுகளுக்கு சென்று திரும்பியவர்களை 14 நாட்களுக்கு தனிமுகாமில் வைத்து கண்காணிக்க வேண்டிய அவசியம் நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிங்கப்பூர் செல்வதை தவிர்க்குமாறு ஏற்கனவே பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாக, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சீனா, ஹாங்காங், தாய்லாந்து, தென்கொரியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இந்திய விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேபாளம், இந்தோனேஷியா, வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.