டெல்லி வன்முறை பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு ‘இந்த பைத்தியக்காரத்தனம் உடனடியாக முடிய வேண்டும்’ கெஜ்ரிவால்

Read Time:2 Minute, 49 Second

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக ஏற்கெனவே டெல்லி ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் ஜாஃப்ராபாத் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு திடீரென சாலை மறியல் தொடங்கியது.

இப்போராட்டத்துக்கு பதிலடியாக ஜாப்ராபாத் அருகில் உள்ள மெளஜ்பூர் பகுதியில் சிஏஏ ஆதரவு போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, இருதரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். போலீசார் கட்டுப்படுத்தினர். இப்பகுதியில் திங்கள்கிழமையும் வன்முறை ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்.
செவ்வாய் கிழமையும் ஜாஃப்ராபாத், மெளஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக் ஆகிய பகுதிகளில் வன்முறை நீடித்தது. இதன் காரணமாக நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர மெளஜ்பூர், பிரம்மபுரி, கஜோரி காஸ், பஜன்புரா உள்ளிட்ட பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வன்முறைப் பகுதிகளில் போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர். எனினும், ஆங்காங்கே வன்முறை தொடர்ந்து ஏற்பட்டது. வன்முறையாளர்கள் அப்பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும், பொது சொத்துகளுக்கும் தீ வைத்து எரித்தனர். மேலும் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். இதனால் சாலைகள் முழுவதும் கற்கள் சிதறிக் கிடந்தன. வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது என ஜிடிபி மருத்துவமனை தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. நூற்றுக்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ச்சியாக ஆய்வுகளையும், ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

வன்முறையில் காயம் அடைந்து ஜிடிபி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்த்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “இந்த பைத்தியக்காரத்தனம் உடனடியாக முடிய வேண்டும்” என்றார் காட்டமாக கூறினார்.