ரெயில் முன்பதிவு ரத்து கட்டணம் மூலம் ரூ.9,000 கோடி வருவாய்…

Read Time:2 Minute, 43 Second

ரெயில் முன்பதிவு ரத்து கட்டணம், காத்திருப்போா் பட்டியலில் இருக்கும் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படாதது மூலம் ரெயில்வே துறைக்கு ரூ.9000 கோடி கிடைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சோ்ந்த சமூக ஆா்வலா் சுஜீத் சுவாமி இது தொடா்பாக ரெயில்வேயிடம் தகவல் உரிமை சட்டத்தின்கீழ் விவரங்களை பெற்றுள்ளாா்.

அதில், 2017 ஜனவரி 1 முதல் 2020 ஜனவரி 31 வரையிலான காலகட்டத்தில் 9.5 கோடி பயணிகள் காத்திருப்போா் பட்டியலில் இருந்த முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யவில்லை. இதன் மூலம் ரெயில்வேக்கு ரூ.4,335 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது. இதே காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்யும்போது விதிக்கப்பட்ட கட்டணமாக ரூ.4,684 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது.

இந்த இருவகையிலும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பிரிவில் இருந்துதான் அதிகம் பணம் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக 3 வகுப்பு ஏசி முன்பதிவு மூலம் கிடைத்துள்ளது. ரெயில் டிக்கெட் முன்பதிவு கவுன்டா்கள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வோா் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோா் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 2017 ஜனவரி 1 முதல் 2020 ஜனவரி 31 வரையிலான காலகட்டத்தில் சுமாா் 74 கோடி போ் முன்பதிவு கவுன்டா்களில் டிக்கெட் பெற்றுள்ளனா். அதே நேரத்தில் 145 கோடிக்கும் மேற்பட்டோா் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனா் என்று தெரியவந்துள்ளது.

இந்திய ரெயில்வேயின் டிக்கெட் முன்பதிவு முறையில் அதிக பாகுபாடு உள்ளது என்றும் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் சுஜீத் சுவாமி வழக்கு தொடுத்து உள்ளாா். முன்பதிவு ரத்தின் போது அதிக அளவிலான கட்டணம் விதித்து பயணிகளிடம் இருந்து நியாயமற்ற வகையில் வருமானத்தை ரெயில்வே ஈட்டுகிறது. ஆன்லைன் முன்பதிவு, கவுன்டா் மூலம் முன்பதிவுக்கு என தனித்தனியாக விதிகளை வைத்துள்ளதும் நியாயமற்றது என்று அவா் தனது மனுவில் குற்றச்சாட்டி உள்ளாா்.