இருமல் மருந்து குடித்த 11 குழந்தைகள் சிறுநீரகம் செயல் இழந்து உயிரிழப்பு, தமிழகத்தில் விற்பனையை நிறுத்த உத்தரவு

Read Time:7 Minute, 13 Second

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்நகரில் 2019 டிசம்பர் முதல் 2020 ஜனவரி வரையில் 11 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகள் உயிரிழப்பில் ஒற்றுமை காணப்பட்டது. அவர்கள் அனைவரும் சிறுநீரகம் செயல் இழந்தது உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள மருத்துவக் குழு பணியமர்த்தப்பட்டது.

விசாரணையில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள டிஜிட்டல் விஷன் நிறுவனம் தயாரித்த கோல்ட்பெஸ்ட்-பிசி (COLDBEST-PC) இருமல் மருந்து குடித்து உள்ளனர் என்பது தெரியவந்தது. ஜம்மு காஷ்மீர் மாநில மருந்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு அமைப்பின் உதவி மருந்துகள் கட்டுப்பாட்டாளர் சுரிந்தர் மோகன் விசாரணையின் முடிவில் இருமல் மருந்தில் விஷத்தன்மையிருப்பதை உறுதி செய்தார்.

அதாவது, மருந்தில் டைதிலின் கிளைகோல் (DIETHYLENE GLYCOL) என்ற வேதிப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மருந்து தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் சென்னையை அடுத்த மணலியில் தயாரிக்கப்பட்டதாகும் என தெரியவந்தது. உடனடியாக மருந்தை பிற குழந்தைகள் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். இமாச்சலப்பிரதேச மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின் போது விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருள் இடம்பெற்றிருந்த இருமல் மருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் விற்பனையில் உள்ளது தெரியவந்தது. தயாரிக்கப்பட்ட மருந்தின் முதல் தொகுதி 5,500 பாட்டில்கள் செப்டம்பர் முதல் சந்தைக்கு சென்றுள்ளது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, உத்தரபிரதேசம், தமிழகம் (திருச்சி), மேகாலயா (சில்லாங்) மற்றும் திரிபுராவிற்கு 2019 செப்டம்பரில் மருந்து விற்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

இருமல் மருந்தில் விஷத்தன்மை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதனை விற்பனை செய்வதை நிறுத்துமாறு அனைத்து அனைத்து மாநிலங்களுக்கும் இமாச்சல பிரதேச அதிகாரிகள் தகவலை அனுப்பினர்.

இமாச்சல பிரதேச மருந்து கட்டுப்பாட்டாளர் நவனீத் மர்வா இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், தயாரிக்கப்பட்ட மருந்தின் முதல் தொகுதி (5,500 பாட்டில்கள்) செப்டம்பர் முதல் சந்தையில் இருந்ததால் ஏற்கனவே 3,400-3,450 (பாட்டில்கள்) விற்பனை செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ரசீதுகள் மூலம் நுகர்வோரை கண்டறிய எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். விற்பனை செய்யப்பட்ட பழைய தொகுதியில் மருந்து பாட்டில்கள் 60 மில்லி அளவுக்கொண்டது. எனவே, ஒவ்வொரு டோஸிலும் யாராவது 5-6 மில்லி எடுத்து கொண்டால், அது, 10-12 அளவுகளில் முடிவடையும். இதுவரையில் சுமார் 1,500 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் 500 க்கும் மேற்பட்டவை மருந்து ஆய்வாளர்களால் மாதிரி எடுக்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கையாக, மாநில ஒழுங்குமுறை அமைப்பு நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை இடைநிறுத்தியுள்ளது. அவர்களின் (டிஜிட்டல் விஷன் பார்மாவின்) அனைத்து ஆவணங்களையும் நாங்கள் வைத்திருக்கிறோம். இது விசாரணையின் ஒரு பகுதியாகும், எனவே, இந்த கட்டத்தில் என்ன நடந்தது என்று சொல்வது முன்கூட்டியே நிர்ணயம் செய்வதாக இருக்கும். இந்தியாவின் உச்ச மருந்து ஒழுங்குமுறை அமைப்பான மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பும் (சி.டி.எஸ்.கோ) இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளது எனக் கூறியுள்ளார்.

இருமல் மருந்தில் விஷத்தன்மையிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதனை விற்பனை செய்வது தமிழகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. நியூஸ் மினிட் இணையதளம் திருச்சியில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் அலுவலக அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளது. அவர், “இருமல் மருந்து மாசுபட்டுள்ளது மற்றும் அதை விநியோகிக்கக்கூடாது என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருந்து யாரும் விற்பனை செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் நாங்கள் தகவல் தெரிவித்துள்ளோம்,” என தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையில், மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்திய ஒழுங்குமுறை அமலாக்கத்தில் கடுமையான குறைபாடுகளை சுட்டிக்காட்டி உள்ளனர். ஒரு மருந்து தயாரிக்கப்படுவதற்கு முன்னதாக அதற்கான வேதிப்பொருட்களை பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால், இருமல் மருந்தை நிறுவனம் வேதிப்பொருட்களை பரிசோதனை செய்யாமலே தயாரித்து உள்ளது என குற்றம் சாட்டப்படுகிறது. பொது சுகாதார ஆர்வலர் தினேஷ் தாக்கூர், டிஜிட்டல் விஷன் நிறுவனம் தரம் இல்லாத மருந்துகளை உற்பத்தி செய்வதில் நீண்ட மற்றும் மோசமான வரலாற்றை கொண்டுள்ளது.

டிஜிட்டல் விஷன் நிறுவனத்தின் நீரிழிவு நோய்க்கான மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துக்கள்
2014 மற்றும் 2019 க்கு இடையில் மத்திய அரசின் தர சோதனையில் தோல்வியை தழுவியுள்ளது. இந்நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகிறது.

உணவே மருந்து என்பது மாறி உணவுக்கு முன், பின் என மருந்துகளை பிரித்து உண்ணும் நிலையில் மனித இனம் இன்று உள்ளது. இதுபோன்ற சூழலில் மருந்துகளை வெறும் வேதிப்பொருட்களாக மட்டுமே கருதுவது மாபெரும் தவறு என்பதையே 11 குழந்தைகளின் உயிரிழப்புகள் உணர்த்துகின்றன.