டெல்லி வன்முறை: உளவுத்துறை அதிகாரி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட, ஆம் ஆத்மி கவுன்சிலர் மறுப்பு

Read Time:3 Minute, 44 Second

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிப்பவர்கள் இடையிலான மோதல் கலவரமானது. செவ்வாய் கிழமை கலவரம் உச்சகட்டம் அடைந்தது.

அப்போது, சந்த்பாக் பகுதியில் உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா (வயது 26) கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவருடைய சடலம் அப்பகுதியில் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்டது. அங்கீத் சர்மா உளவுத்துறையில் பாதுகாப்பு உதவியாளராக பணிபுரிந்துவந்தார்.

செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணிக்கு வேலையில் இருந்து திரும்பிய பின்னர், அப்பகுதியில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்க சென்றுள்ளார். அப்போதுதான் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அங்கித் சர்மாவின் சகோதரர் அங்கூர் சர்மா கூறுகையில், என சகோதரர் வெளியே சென்றபோது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களால் பிடிக்கப்பட்டு உள்ளார். அவர்கள் அவரை கத்தியால் குத்தி சாக்கடைக்குள் வீசிவிட்டனர். அங்கித்தை காப்பாற்ற சென்றவர்களையும் எதிர்ப்பாளர்கள் தாக்கினர். எதிர்ப்பாளர்கள் இடைவிடாமல் துப்பாக்கிச் சூடு நடத்தி வந்தனர், யாரையும் அங்கித் அருகே செல்லவிடவில்லை,” எனக் குற்றம் சாட்டினார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட செய்தியில், இது மிகவும் துன்பகரமான உயிரிழப்பு, குற்றவாளிகளை தப்பிக்கவிடக்கூடாது என்றார்.

ஆம் ஆத்மி கவுன்சிலர்

உளவுத்துறை அதிகாரி கொலைக்கு பின்னால் உள்ளூர் கவுன்சிலரும் அவரது கூட்டாளிகளும் இருப்பதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் உள்ளூர் கவுன்சிலர் ஹுசைன் மறுப்பு தெரிவித்து உள்ளார். “ஒருவர் கொலைக்கு என் மீது குற்றம் சாட்டப்படுகிறது என செய்தி அறிக்கைகளிலிருந்து நான் அறிந்தேன். இவை பொய்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். எங்கள் பாதுகாப்பிற்காக, நானும் எனது குடும்பமும் திங்களன்று போலீஸ் முன்னிலையில் எங்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டோம்” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“என்னை குறிவைப்பது தவறு. எனக்கும் எனது குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை,” என அவர் பேசும் வீடியோவை ஆம் ஆத்மி சமூகவலைதள தலைவர் அங்கீத் லால் வெளியிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங், வன்முறையை பரப்புவதில் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது என்றும், இந்த விஷயத்தில் ஹுசைன் தனது அறிக்கையை அளித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.