காவேரி டெல்டா விவசாயிகளுக்கு ஒரு புதிய விடியல்..! ஒ.என்.ஜி.சி. விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டது..!

Read Time:4 Minute, 49 Second

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க ஒ.என்.ஜி.சி. நிறுவனம் அனுமதி கோரிய விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்டது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கியாஸ் எடுப்பதற்கு பல்வேறு இடங்களில் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது. சமீப காலமாக இவ்வகை கிணறுகளால் சுற்றுசூழல் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சங்கள் மற்றும் நிலத்தடிநீர் பற்றாக்குறை போன்றவை தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் புதியதாக இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த தடுப்பதோடு, ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ள திட்டங்களையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். உணவு பாதுகாப்பை உறுதிசெய்து எரிவாயு திட்டங்களை இங்கு செயல்படுத்துவதை தடுக்க காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகளும் போராட்டம் நடத்தினர். அதன்படி, தமிழக அரசு டெல்டாவை
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அங்கு ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்பட பல தொழில்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் -2020 என்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்தது.

ஒ.என்.ஜி.சி. விண்ணப்பம்

ஏற்கனவே, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் லிமிடெட் (ஓ.என்.ஜி.சி.) நிறுவனம் காவிரி டெல்டா பகுதியில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்க அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தது. சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டை நடத்துவதற்கான விதிமுறைகளை கோரி கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த திட்டம் அமைச்சகத்திடம் சமர்பிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 2 ஹைட்ரோ கார்பன் கிணறுகளும், நாகையில் 15 கிணறுகளும், காரைக்காலில் 3 கிணறுகளும் என 640 கோடி ரூபாய் செலவில், 459 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 20 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டிருந்தது.

விண்ணப்பத்தில், பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருவதாகவும், வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதியை குறைப்பதற்கான ஆய்வு முயற்சிகளை அதிகரிக்க அவசர தேவை ஏற்பட்டுள்ளது என ஒ.என்.ஜி.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பி அனுப்பப்பட்டது

இந்நிலையில், முதல் முறையாக காவிரி டெல்டா பிராந்தியத்தில் ஓ.என்.ஜி.சி.யால் முன்மொழியப்பட்ட புதிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திருப்பி அளித்துள்ளது.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்ததை அடுத்து இந்நகர்வு ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் பேசுகையில், “ஓ.என்.ஜி.சி மற்றும் பிற நிறுவனங்கள் தமிழகத்தில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை முன்மொழிகின்றன. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது செயல்படும் திட்டங்களுக்கு எந்தஒரு இடையூறும் செய்யப்படாது. ஆனால், புதிய ஹைட்ரோ கார்பன் திட்டம் எதுவும் அனுமதிக்கப்படாது,” எனக் கூறியுள்ளார்.

மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் எங்கள் கவலைகளை அங்கீகரித்து உள்ளார். மாநில அரசின் அனுமதியின்றி கிணறு அமைக்க புதிய தொகுதி ஒதுக்கீடுகள் செய்யப்பட மாட்டாது என்று எங்களுக்கு உறுதியளித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.