குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற மாட்டோம் – மத்திய அரசு திட்டவட்டம்

Read Time:2 Minute, 54 Second
Page Visited: 138
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற மாட்டோம் – மத்திய அரசு திட்டவட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் மக்கள் கடந்த 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லி வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதல், கலவரமாக வெடித்தது. இதில், 38 பேர் பலியாகி உள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளார்கள். டெல்லியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற மாட்டோம் என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வருமான வரி தீர்ப்பாயம் தொடர்பான கருத்தரங்கில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்துக்கொண்டார்.

கருத்தரங்கில் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், “பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுபான்மையினர் மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இங்கு வரும்போது அவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கிடக்கூடாது. குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறும் பேச்சுக்கே இடம் கிடையாது. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை சமாதானப்படுத்த முயற்சி செய்வோம். ஆனால், தூங்கி கொண்டிருப்பவர்கள்தான் விழிக்க முடியும். விழித்துக்கொண்டு தூங்குவது போல் நடிப்பவர்கள் கிடையாது.

அனைத்து மதத்தினரை சேர்ந்த மக்களின் சமமான அமைதியான வாழ்வு இந்தியாவின் நெறிமுறையாகும். இந்தியா என்பது அன்பான உபசரிப்புக்குரிய நாடாகும். அகமதாபாத் வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எவ்வாறு வரவேற்பு அளித்தோம் என்பதை பார்த்திருப்பீர்கள். அதேநேரத்தில் நாம் மிகவும் கடினமானவர்கள். ஒருபோதும் யாருக்கும் பணிந்து செல்லமாட்டோம்,” எனக் கூறியுள்ளார்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %