பாகிஸ்தானுக்கு செல்லும் சீனாவின் வாத்துப்படை…! ஏன்? எதற்கு?

Read Time:4 Minute, 52 Second

கடந்த 25 ஆண்டுகளில் மோசமான வெட்டுக்கிளி படையெடுப்பு தற்போது ஆப்பிரிக்க நாடுகளிலும், பாகிஸ்தான் உள்ளிட்ட சில ஆசிய நாடுகளிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே, உள்நாட்டு போர்களாலும் பஞ்சத்தாலும் தள்ளாடிக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள், வெட்டுக்கிளிகளால் பேரபாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.

வெட்டுக்கிளிகள் எல்லா இடத்திலும் பரவியிருக்கும் பூச்சியினத்தை சேர்ந்தவையாகும்.

பச்சை நிறம் கொண்ட இப்பூச்சிகளை கிராமப்புறங்களில் உள்ளவர்கள் பார்க்கலாம். இப்பூச்சிக்கள் தனித்தனியாக இருந்தால் எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. ஆனால், பூச்சிகள் கூட்டம் சேரும்போதுதான் அவற்றின் படையெடுப்பு நிகழ்கிறது. பெருங்கூட்டமாக அவை பறக்கும்போது வழியிலுள்ள வயல்களில் எந்த தானியமும் மிஞ்சாத வகையில் வயல்களை மொட்டையடிவிடும். சூரியாவின் காப்பான் படத்தில் இக்காட்சி காட்டப்பட்டு இருக்கும். இதில் பாலைவன வெட்டுக்கிளிகளால்தான் அதிக அளவு சேதம் ஏற்படுகிறது. தற்போது படையெடுத்திருப்பவை இவைதான்.

பாகிஸ்தானில் பாலைவன வெட்டுக்கிளிகளின் வருகையால் விவசாய பயிர் விளைச்சல்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ள உள்ளன. பாலைவன வெட்டுக்கிளிகளுக்கு எதிராக நெருக்கடி நிலையை அந்நாடு அறிவித்துள்ளது. பாலைவன வெட்டுக்கிளிகளின் தலைநகரம் எத்தியோப்பியா எனலாம். இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் அங்கிருந்து சூடான் சவுதி அரேபியா, ஈரான் வழியாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து இந்திய எல்லைப்பகுதி வரையில் வந்துள்ளன.

பாகிஸ்தானை பொறுத்தவரை பஞ்சாப் மாகாணம்தான் நாட்டின் முக்கிய விவசாய உற்பத்தி பிராந்தியமாகும் தற்போது அங்கு வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்தியுள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் மொத்த விளைச்சலும் நாசமாகிவிட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானின் பெரும்பங்கு விவசாயமும் வீணாகியுள்ளதாக கவலை தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே பாகிஸ்தானில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பயிர்களை அழிக்கும் பூச்சிகளை சமாளிக்க ரூ.730 கோடி தேவைப்படும் ஒரு தேசிய செயல் திட்டத்திற்கும் (என்ஏபி) பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்து உள்ளார். பாகிஸ்தானின் எந்தஒரு நடவடிக்கைக்கும் வெட்டுக்கிளிகள் அடங்கியதாக தெரியவரவில்லை. இந்நிலையில் வெட்டுக்கிளிகளுக்கு எதிரான போருக்கு சீனா, பாகிஸ்தானுக்கு உதவியாக 1,00,000 வாத்துகளை அனுப்புகிறது. ஏற்கனவே சீனாவின் விவசாயத்துறை அதிகாரிகள் பாகிஸ்தானில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் வெட்டுக்கிளிகளை அழிப்பது தொடர்பான ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாத்துக்கள் அனுப்பப்படுகிறது. ஒரு வாத்து நாள் ஒன்றுக்கு 200க்கும் அதிகமான வெட்டுக்கிளிகளை திங்க வல்லது. எனவே, அவற்றால் வெட்டுக்கிளிகளை அழிக்க முடியும் என திட்டமிடப்படுகிறது. 2000-ம் ஆண்டில் வெட்டுக்கிளிகள் சீனாவின் சின்ஜியாங்கில் படையெடுத்த போது, அங்கு 1,00,000 க்கும் அதிகமான வாத்துக்கள் கொண்டு செல்லப்பட்டது. அதன்மூலம் வெட்டுக்கிளிகள் அழிக்கப்பட்டது. பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதால் பெரும் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது. இப்போது வாத்துக்கள் மூலம் நேர்த்தியான அணுகுமுறையை கையாளலாம் என இருநாட்டு அதிகாரிகளும் தெரிவிக்கிறார்கள். வெட்டுக்கிளிகளை எதிர்த்து போராடிய பிறகு, வாத்துகளும் உணவாக மாறக்கூடும் எனவும் கூறுகிறார்கள் சீன அதிகாரிகள்.