மராட்டியத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை மராத்தி கட்டாயம்…

Read Time:3 Minute, 54 Second

மராட்டியத்தில் அனைத்து பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரை மராத்தி பாடம் கட்டாயமாக்கப்படும் மசோதா அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்து முதல்வர் உத்தவ் தாக்கரே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக அனைத்து பள்ளிகளிலும் மராத்தி மொழியை கட்டாயமாக்க மாநில அரசு முடிவு செய்தது.

மராட்டியத்தில் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில், ஏற்கனவே மராத்தி மொழி முதன்மை பாடமாக உள்ளது. இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ. எனப்படும் சர்வதேச பாடத்திட்ட பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளிலும் மராத்தி மொழியை கட்டாயமாக்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, மேற்கண்ட இந்த பள்ளிகளிலும் மராத்தி மொழியை கட்டாயமாக்குவதற்கு வரைவு சட்டம் தயாரிப்பதற்காக 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

மராத்தி மொழியை அனைத்து வகை பள்ளிகளிலும் கட்டாயமாக்குவது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டது.

ஜனவரியில் மும்பை மராத்தி பத்திரிகையாளர்கள் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது பேசுகையில், மாநிலத்தில் சுமார் 25 ஆயிரம் தனியார் ஆங்கில பள்ளிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இந்த பள்ளிகளில் மராத்தி பாடம் கற்றுக்கொடுக்கப்படுவது கிடையாது. அது விருப்பப்பாடமாக கூட வைக்கப்படவில்லை. இதுபோன்ற எல்லா பள்ளிகளிலும் மராத்தி கற்று கொடுக்கப்படுவது இனி கட்டாயமாக்கப்படும்.

அனைத்து விதமான பள்ளிகளிலும் (அரசு, தனியார், சர்வதேச பாடத்திட்ட பள்ளிகள்) 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மராத்தி பாடத்தை கட்டாயமாக்கும் மசோதா வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என்றார். மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பிப்ரவரி 27-ம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு வரையிலும் மராத்தி மொழியை கட்டாயமாக்குவதற்கான சட்ட மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் பேசுகையில், ‘அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை மராத்தி மொழியை கட்டாயமாக்குவது அரசின் கொள்கை முடிவாகும். அரசு பள்ளிகளை தவிர சிபிஎஸ்இ, ஐபி, ஐசிஎஸ்இ பள்ளிகளில் மராத்தி கட்டாயமாக்கப்படும். தற்போது தாக்கல் செய்யப்பட உள்ள மசோதா மூலம் 10-ம் வகுப்பு வரை, மராத்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும். இதன் மாதிரி திட்டம் குறித்து அரசு ஆய்வு செய்துள்ளது. தென் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் மாநில மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

இந்த விதிகளை மீறுவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.