அறிவியல் அதிசயம்: ஆக்சிஜன் இல்லாமல் உயிர்வாழும் உயிரினம் கண்டுபிடிப்பு…!

Read Time:2 Minute, 33 Second

இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிர்வாழும் ஒரு புதிய உயிரினத்தை கண்டுபிடித்து உள்ளனர்.

10–க்கும் குறைவான செல்களை கொண்ட சிறிய உயிரி, ஜெல்லி மீன்கள், பவளப்பாறைகளின் குடும்பத்தை சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த உயிரிக்கு கென்னிகுயா சால்மினிகோலா என பெயரிடப்பட்டு இருக்கிறது. இதுவரை ஒரு செல் உயிரினமான பூஞ்சை, அமீபா போன்றவையே காற்று இல்லாமல் உயிர் வாழும் தகுதியை பெற்று இருந்தன. ஆனால் ஏறத்தாழ 10 செல்களை கொண்ட கென்னிகுயாவும் ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழும் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக்கழக விஞ்ஞானியும் பேராசிரியருமான ஹுகான் கூறுகையில், பொதுவாக விலங்குகள் அனைத்தும் ஆக்சிஜனை பயன்படுத்தியே ஆற்றலை உருவாக்குகின்றன. அதற்கு மைட்டோகாண்ட்ரியா மிகவும் முக்கியமானது. மைட்டோகாண்ட்ரியா என்பது ஆக்சிஜனை உள்வாங்கி சக்தியாக மாற்றக்கூடிய தன்மையை கொண்டது. ஆனால் அது கென்னிகுயாவில் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் அவை எதை வைத்து ஆற்றலை உருவாக்குகின்றன என்பதும் அவை சுவாசிக்க வேறு ஏதேனும் வழிமுறை உள்ளனவா என்பதும் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது என்று கூறியுள்ளார்.

தற்போது மாறிவரும் பரிணாம ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பானது ஒரு முக்கிய பங்கு வகிக்கும். ஏனெனில், ஒரு செல் உயிரினங்கள் மட்டுமே ஆக்சிஜன் இல்லாமல் வாழலாம் என்ற நிலைமாறி தற்போது 10 செல்களை கொண்ட உயிரினங்களும் காற்று இல்லாமல் உயிர் வாழ முடியும் என்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இதுவே மற்ற விலங்குகளுக்கும் பொருந்தும் வகையில் அவை ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழும் நிலை உருவாகலாம். இது விலங்கியல் ஆராய்ச்சி தொடர்பான அனுமானத்தை மாற்றி அமைக்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.