ஈரோட்டில் மின்வேலியில் சிக்கி 2 யானைகள் உயிரிழப்பு

Read Time:4 Minute, 54 Second

ஈரோடு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஜீர்கள்ளி, ஆசனூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. இதனால் மரங்கள் காய்ந்து காணப்படுகின்றன. செடி, கொடிகள் கருகிவிட்டன. நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.

இதன்காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் வனப்பகுதியைவிட்டு வெளியேறி அடிக்கடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள கரும்பு, வாழை, தென்னை சாப்பிடுகிறது.

இந்த நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 2 யானைகள் தோட்டத்து மின்வேலியில் சிக்கி இறந்த சம்பவம் நடந்து உள்ளது. தாளவாடியை அடுத்த கரளவாடி வனப்பகுதியையொட்டி 4 ஏக்கர் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி கருப்பசாமி 4 ஏக்கரில் கரும்பு பயிரிட்டு உள்ளார். பிப்ரவரி 27-ம் தேதி இரவு ஆண் யானை ஒன்றும், பெண் யானை ஒன்றும் வனப்பகுதியை விட்டு வெளியேறி அந்த தோட்டத்துக்குள் வந்துள்ளது.

அப்போது அந்த 2 யானைகளும் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கின. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே 2 யானைகளும் பரிதாபமாக இறந்தன. இதுபற்றி அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்வேலியில் சிக்கி இறந்த 2 யானைகளையும் பார்வையிட்டனர். அப்போது வனத்துறை அதிகாரிகளிடம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். யானைகளால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் மின்வேலி காரணமாக அடிக்கடி யானைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. “பெரும்பாலான இடங்களில் விதிமுறைகளை மீறி மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. யானைகள் உயிரிழப்புக்கு இதுவே முக்கியக் காரணம்,” என குற்றம் சாட்டப்படுகிறது. இந்தியா முழுவதும் மனிதர் – யானைகள் எதிர்க்கொள்ளலில் யானைகள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 80 யானைகள் வரையில் மின்வேலியால் உயிரிழப்பதாக மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வனப்பகுதிகளில் உள்ளவிளைநிலங்களில் விளைபொருட்களை பாதுகாக்க வனத்துறை அனுமதியுடன் மின்வேலி அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், வேலியில் குறைந்த மின் அழுத்தம் மட்டுமே பாய்ச்ச வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. விளைநிலத்தில் நுழைய முயலும் வனவிலங்குக்கு எச்சரிக்கையை ஏற்படுத்தும் வகையிலேயே மின்வேலி அமைக்கப்பட வேண்டும். மாறாக, விவசாயி கருப்புசாமி மின்வேலியில் அதிக மின் அழுத்தம் பாய்ச்சி இருந்ததால், யானைகள் இரண்டும் அடுத்தடுத்து உயிரிழந்து இருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள ஜீரஹள்ளி வனத்துறையினர், கருப்புசாமியை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சுற்றுச்சூழலியலாளர்கள், வனப்பகுதியையொட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் விரும்பி உண்ணும் கரும்பு போன்ற பணப்பயிர்களை பயிரிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இந்த வேலியில் மனிதர் ஒருவர்தொட்டிருந்தாலும் மரணம் ஏற்பட்டிருக்கும் என்பதால், மின்வேலியில் அதிக மின்சாரம் பாய்ச்சுவதை கொடுங்குற்றமாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.