சீனாவில் கொரோனா வைரஸ் ‘யு-டர்ன்’…!ஆபத்தான நிலையில் 7000 பேர், மக்கள் பெரும் அச்சம்

Read Time:2 Minute, 10 Second

சீனாவில் டிசம்பர் மாதம் காணப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி நாட்டையே உலுக்கியுள்ளது.

இதுவரையில் வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,835 ஆக அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து சனிக்கிழமையன்று சீனாவின் சுகாதார மையம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், சீனாவில் வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,835 ஆக அதிகரித்து உள்ளது. வைரஸ் காய்ச்சலுக்கு 31 மாகாணங்களில் இதுவரை 79 ஆயிரத்து 251 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 7,000-க்கும் அதிகமானவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர். 39 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையிலிருந்து பூரண குணமடைந்து திரும்பி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை ஒருபக்கம் உயர்ந்தாலும் சீனாவின் மருத்துவ போராட்டத்தினால் பலர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் மீண்டும் ஒரு மோசமான செய்தி அங்கிருந்து வெளியாகியுள்ளது. அதாவது, கொரோனா வைரஸ் யு-ட்ரன் எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. வைரசினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் பலன்பெற்று வீடு திரும்பியவர்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

பல்வேறு மாகாணங்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவர்கள், மீண்டும் வைரஸ் பாதிப்பினால் மருத்துவமனையில் சேர்ந்து உள்ளனர். சுமார் 7 நாட்களிலே அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது சீனாவின் மருத்துவ போராட்டத்திற்கு பெரும் சவாலாகவும், கேள்வியாகவும் எழுந்துள்ளது.