சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்திற்கு இந்தியா பதிலடி.!

Read Time:2 Minute, 38 Second

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் நடத்தியவர்கள் இடையிலான மோதல் கலவரத்தில் முடிந்தது. இந்நிலையில் சர்வதேச மதசுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்.) இந்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டது.

அதில், டெல்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. இந்தியா தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும். கும்பல் வன்முறையாளர்களால் குறிவைக்கப்பட்ட இஸ்லாமியர்களையும், மற்றவர்களையும் பாதுகாக்க தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் சில அமெரிக்க எம்.பி.க்கள் டெல்லி வன்முறை சம்பவங்களுக்கு கவலையை வெளிப்படுத்தி கருத்துக்களை தெரிவித்தனர். இந்து அமெரிக்க அறக்கட்டளை மற்றும் இந்திய-அமெரிக்க இஸ்லாமியர் கவுன்சில் போன்ற அமைப்புகளும் வன்முறையை கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டன. அமெரிக்க மத சுதந்திரத்திற்கான ஆணையத்தின் அறிக்கைக்கு இந்தியா பதிலடியை கொடுத்து உள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:- டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம், மீடியாக்கள் மற்றும் ஒரு சில நபர்கள் தெரிவித்த கருத்துக்களை நாங்கள் கண்டிருக்கிறோம். இவை அனைத்தும் உண்மையில் தவறானவை, தவறான வழிநடத்தல் மற்றும் பிரச்சினையை அரசியலாக்குதல் இலக்காக காணப்படுகின்றன எனக் கூறினார்.

டெல்லியில் வன்முறையை தடுப்பதற்கும், இயல்புநிலையை மீட்டெடுப்பதை உறுதி செய்வதற்கும் சட்ட மற்றும் பாதுகாப்பு முகமைகள் செயல்பட்டு வருகின்றன எனவும் வெளியுறவுத்துறை தெரிவித்தது.