நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்… சுருதிஹாசன் உருக்கம் ஏன்?

Read Time:5 Minute, 21 Second

நடிகை சுருதிஹாசன் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார்.

விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து முடித்து உள்ளார். இது விரைவில் திரைக்கு வருகிறது. தெலுங்கில் ரவிதேஜாவுடன் கிராக் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு தன் மூக்கில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவார். அதில் சமீபத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படத்துக்குப் பலரும் வயதாகிவிட்டது எனக் கிண்டல் செய்து உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டார். அதில் உடல் மெலிந்த தோற்றத்தில் ஆளே மாறிப்போய் இருந்தார். இந்த புகைப்படங்களை பார்த்த சில ரசிகர்கள் விமர்சித்தனர். உடல் இளைத்து அழகை கெடுத்து விட்டீர்களே நன்றாக சாப்பிட்டு எடையை கூட்டுங்கள் என்றனர்.

இன்னும் சிலர் சுருதியின் தோற்றத்தை கேலி செய்தனர். “கமல் சார் சுருதி மேடம் சாப்பிடாமல் இருக்கிறார். என்னவென்று கேளுங்கள்” என்றனர்.

ரசிகர்களின் இந்த கருத்துகளுக்கு சுருதிஹாசன் இன்ஸ்டாகிராமில் பதில் அளித்து கூறியதாவது:-

“ஆகவே… என்னுடைய முந்தையநிலை தகவலுக்குப் பிறகு தொடர்ந்து இந்த நிலை தகவலையும் பதிவிட முடிவெடுத்தேன். ஏன் என்று கூறுகிறேன். என்னை பற்றி பிறர் கூறும் கருத்துகள் மூலம் என் வாழ்க்கையை நான் நடத்துபவரல்ல. ஆனால், தொடர்ந்து அவள் குண்டாக இருக்கிறாள், ஒல்லியாக இருக்கிறாள் என்ற கருத்துகள் தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த 2 படங்களும் 3 நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டது. நான் என்ன கூறப்போகிறேன் என்பதுடன் தொடர்புபடுத்திக் கொள்ளக் கூடிய பெண்கள் இருக்கிறார்கள். நான் எப்போதுமே மனதளவிலும் உடலளவிலும் என்னுடைய ஹார்மோன்களின் கருணையிலிருந்து வருகிறேன்.
சில ஆண்டுகளாக அதனுடன் ஆரோக்கியமான முறையில் உறவுடன் இருக்க பாடுபடுகிறேன். அது சுலபமல்ல. வலி சுலபமல்ல, உடல் மாற்றங்கள் சுலபமல்ல, ஆனால் என் பயணத்தைப் பகிர்ந்து கொள்வது எளிது. யாராக இருந்தாலும் அவர் புகழ்பெற்றவராக இருந்தாலும் இல்லையென்றாலும் இன்னொருவர் பற்றி தீர்ப்பளிக்கும் நிலையில் இல்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். இதுதான் என் வாழ்க்கை. இதுதான் என் முகம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

ஆம்! நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன். இதனை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. நான் இதனை விளம்பரப்படுத்துகிறேனா? இல்லை, நான் அதற்கு எதிரானவரா இல்லை. இப்படி வாழ்வதைத்தான் நான் தேர்ந்தெடுத்துள்ளேன். நமக்கு நாமே செய்துகொள்ளக் கூடிய சாதகம் என்னவெனில் நம் உடல், மன ஆகியவற்றின் இயக்கத்தையும் மாற்றங்களையும் ஏற்றுக்கொள்ள கற்றுக் கொள்வதே,

அன்பை பரப்புங்கள். நான் ஒவ்வொரு நாளும் என்னை நேசிக்க கற்றுக்கொண்டு வருகிறேன், என்னை பொறுத்தவரை கூடுதல் நேசம் தேவைப்படுவதன் காரணம் என் வாழ்க்கையின் மிகப்பெரிய காதல் கதை என்னிடம் இருக்கிறது. இது உங்களுக்குமானது என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.