3-வது திருமணம்: கர்ப்பமாக இருக்கும் காதலியை மணக்கிறார் – இங்கிலாந்து பிரதமர்.!

Read Time:3 Minute, 19 Second

இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பிரதமர் போரிஸ் ஜான்சன் (வயது 55) விரைவில் 3-வது திருமணம் செய்யப்போகிறார்.

போரிஸ் ஜான்சன் தன்னை விட 24 வயது குறைந்த கேரி சைமண்ட்ஸ் (31) என்ற பெண்ணை காதலித்து வருகிறார். அவருடன் திருமணம் செய்து கொள்ளாமல், சேர்ந்து வாழ்கிறார். தற்போது திருமணம் நடைபெற உள்ளது. போரிஸ் ஜான்சனை பொறுத்தமட்டில் அவர் மூன்றாம் திருமணம் செய்ய உள்ளார்.

முதல் மனைவி அலெக்ரா மொஸ்டின் ஒவனுடன் 1987-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது காதலித்து, 1987-ல் திருமணம் செய்து கொண்டனர். 6 ஆண்டுகளில் அந்த திருமணம் முறிந்து போனது. 1993-ம் ஆண்டு, வக்கீலான மெரினா வீலர் என்ற பெண்ணை போரிஸ் ஜான்சன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இளம்வயது முதல் நண்பர்களாக இருந்து, திருமண வாழ்வில் இணைந்த இவர்களுக்கு 4 குழந்தைகள். ஆனாலும் தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 2018-ல் பிரிந்து விட்டனர். அதைத் தொடர்ந்துதான் கேரி சைமண்ட்சுடன் போரிஸ் ஜான்சன் பழக ஆரம்பித்து, அவர் கர்ப்பமாக உள்ளார். அவருடன் மூன்றாவது திருமணம் நடைபெற உள்ளது.

லண்டனில் எண். 10, டவுனிங் வீதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் குடியேறிய முதல் பிரதமர் ஜோடி என்ற பெயர் போரிஸ் ஜான்சன் ஜோடிக்கு கிடைத்து உள்ளது. இதேபோன்று கடந்த பல நூற்றாண்டுகளில் ஒரு பிரதமரின் மிக இளம்வயது வாழ்க்கை துணைவி என்ற பெயரை கேரி சைமண்ட்ஸ் பெற்று உள்ளார்.

மேலும், இங்கிலாந்து நாட்டின் 200 ஆண்டு கால வரலாற்றில் பிரதமர் பதவியில் இருந்தவாறு திருமணம் செய்து கொள்ளப்போகிற முதல் பிரதமர் என்ற பெயரையும் போரிஸ் ஜான்சன் பெறுகிறார்.

தற்போது கேரி சைமண்ட்ஸ் கர்ப்பமாக உள்ளார். இவருக்கு அடுத்த சில மாதங்களில் குழந்தை பிறக்க உள்ளது. இந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொள்ள போரிஸ் ஜான்சன் முடிவு செய்து, அதற்கான நிச்சய நிகழ்ச்சி நடந்து உள்ளது. இதை கேரி சைமண்ட்ஸ், சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் கேரி சைமண்ட்ஸ் குழந்தையை பெற்றெடுத்த பின்னர் திருமணமா, பெறுவதற்கு முன்னரே திருமணமா என்பது தெரியவரவில்லை. கேரி சைமண்ட்ஸ், கன்சர்வேடிவ் கட்சியில் சேர்ந்து பணியாற்றியவர், 2010-ம் ஆண்டு லண்டன் மேயர் தேர்தலில் போரிஸ் ஜான்சனுக்காக பிரசாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.