2-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘எழும்பூர்-மதுரை’ தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்…

Read Time:2 Minute, 50 Second

சென்னை எழும்பூர்-மதுரை இடையே அதிவேகத்தில் இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1-ல் தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதல்முறையாக மும்பை-கோவா இடையே 2017-ம் ஆண்டில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது. பின்னர் 2-வதாக எழும்பூர்-மதுரை இடையே இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

முற்றிலும் குளிரூட்டப்பட்ட அதிநவீன வசதிகளுடன் இயக்கப்பட்டு வரும் தேஜஸ் ரெயிலில் ‘வை-பை’வசதிகள் உள்பட பல்வேறு சிறப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் முழுவதும் சென்னை ஐ.சி.எப்.-ல் தயாரிக்கப்பட்டது. ரெயிலில் 23 பெட்டிகள் உள்ளன. அதில் 18 பொது வகுப்பு குளிர்சாதன பெட்டிகள், 2 உயர்வகுப்பு பெட்டிகள், 3 டீசல் ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகும்.

விமானத்தில் பயணிப்பது போன்ற உணர்வை தரும் தேஜஸ் ரெயிலின் உயர் வகுப்பு பெட்டியில் 56 பயணிகளும், இதர குளிர்சாதன பெட்டியில் 78 பயணிகளும் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இயக்கப்படும் தேஜஸ் ரெயில், காலை 6 மணிக்கு எழும்பூரில் புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மதுரைக்கு சென்றடையும். மறுமார்க்கமாக மதியம் 3 மணிக்கு மதுரையில் புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூருக்கு வந்தடையும். 6½ மணி நேரத்தில் சென்றடைவதால் தொழில் சம்பந்தமாக வந்து செல்வோருக்கு வரபிரசாதமாக இந்த ரெயில் அமைந்து உள்ளது.

தேஜஸ் ரெயில் திருச்சி மற்றும் கொடைரோடு ஆகிய 2 ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். முதலில் சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டது. பின்னர் பயணிகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரிக்க தற்போது வியாழக்கிழமை தவிர்த்து, வாரத்தில் 6 நாட்கள் வழக்கமான ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை எழும்பூர்-மதுரை இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. சேவையை தொடங்கி 2-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை கொண்டாடும் விதமாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.