சீனாவில் உகான் நகரில் டிசம்பரில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளுக்கு பரவி வருகிறது. டிசம்பரில் சீனாவின் காட்டு விலங்குகள் இறைச்சி சந்தையிலிருந்து பரவியதாகக் கருதப்படும் கொரோனா வைரஸ் 60 நாடுகளில் பரவி உள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகள் முதல் கரோனா பலியை அறிவிக்க, இத்தாலி, தென் கொரியா, ஆகிய நாடுகளும் மீள முடியுமா என்ற கேள்வியுடன் கொரோனாவுடன் போராடி வருகிறது. இதற்கிடையே சீனாவில் ஏற்கனவே பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சீனாவில் மட்டும் கரோனா பலி எண்ணிக்கை 2912 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 202 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 80 ஆயிரம் பேர் வரையில் வைரசினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்காவில் இந்த நோய்க்கு முதல் முறையாக உயிர்ப்பலியும் ஏற்பட்டு உள்ளது. வாஷிங்டன் மாகாணம் கிங் பகுதியை சேர்ந்த 55 வயதான ஒரு பெண் பலியானார். அவருக்கு எப்படி இந்த நோய் தொற்றியது என்று தெரியவில்லை. மாகாணம் முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த டிரம்ப் பயண கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த 14 நாட்களில் ஈரானுக்கு சென்ற வெளிநாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய டிரம்ப் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோல், தென்கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளில் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்கர்களை டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகை உலுக்கி வரும் துயரமான கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 3,000-த்தையும் கடந்து விட்டது.