குடியுரிமை திருத்த சட்டம்: மேகாலயாவில் போராட்டம் ஏன்?

Read Time:3 Minute, 16 Second

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வன்முறை: மேகாலயாவில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

குடியுரிமை திருத்த சட்டம்: மேகாலயாவில் போராட்டம் ஏன்?

பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டுவந்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் இந்துக்களோ, இஸ்லாமியர்களோ யாருக்கும் குடியுரிமை வழங்க கூடாது என வலியுறுத்தப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் பிற மாநிலத்தினர் மற்றும் வெளிநாட்டவர்கள் உள்ளே நுழைவதற்கு இன்னர் லைன் பெர்மிட் (ஐ.எல்.பி.) அவசியமாகிறது. வடகிழக்கில் இது தற்போது மணிப்பூர், மிசோரம், அருணாச்சல பிரதேசம் மற்றும் நாகாலாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு பொருந்தும். இங்கு, நுழைந்த வெளிநாட்டவர்கள் யாருக்கும் தற்போதைய சட்ட திருத்தத்தின்படி குடியுரிமை வழங்கப்படாது.

இதேபோன்ற இன்னர் லைன் பெர்மிட் நடைமுறை தங்கள் மாநிலத்திற்கும் வேண்டும் என மேகலாயாவிலும் பழங்குடியினர் வலியுறுத்தி நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேகாலயா மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பூர்வீகமக்கள் எதிராக உள்ளனர். அதுவே, அம்மாநிலத்தில் வந்து குடியேறியவர்கள் ஆதரவாகவும் உள்ளனர். இதுதொடர்பாக மேகாலயா மாநிலம் கிழக்கு காஸி மலைப்பகுதி மாவட்டத்தில் உள்ள இச்சமதி கிராமத்தில் காஸி மாணவர் சங்கத்தினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்கள் சனிக்கிழமை நடத்திய பேரணி மற்றும் கூட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து வன்முறை சம்பவங்களில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து மாநிலத்தில் தலைநகர் ஷில்லாங், காஸி மலைப்பகுதி உள்பட 6 மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் கலவரம் பரவாமல் இருக்க செல்போன், இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். சேவையும் 5 நாட்களுக்கு நிறுத்தப்பட்டு உள்ளது.

மேகாலயாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஷில்லாங்கில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. பதற்றத்தை தணிக்கும் வகையில் மத்திய ரிசர்வ் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மக்கள் அமைதி காக்கும்படி அரசு தரப்பிலும், போலீஸ் தரப்பிலும் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.