தேவையற்ற செலவு: டைரிகள், காலண்டர்கள் அச்சிட அமைச்சகங்களுக்கு தடை – மத்திய அரசு உத்தரவு

Read Time:1 Minute, 33 Second

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தவிர பிற அமைச்சகங்கள் தனித்தனியாக டைரிகள், காலண்டர்கள் அச்சிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்தது.

இது தொடர்பாக அனைத்து அமைச்சகங்களுக்கும் கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா எழுதியுள்ள கடிதத்தில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் கீழ் உள்ள தகவல் தொடர்பு பணியகத்துடன், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள அமைப்புகளும் காலண்டர்கள், மேஜை காலண்டர்கள் மற்றும் டைரிகளை தனித்தனியாக அச்சிட்டு வருகின்றன. இதனால் மூலம் இரட்டை பணிகளும், அதிக நிதி செலவும் ஏற்படுகிறது.

இந்த பணிகள் அனைத்தும் தகவல் தொடர்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அந்த பணியகம் அரசு காலண்டர்கள், டைரிகளை மொத்தமாக தயாரித்து பிற அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவுக்கு அனைத்து அமைச்சகங்களும் கண்டிப்பாக இணங்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டு உள்ளது. மொபைல் போன்ற மின்னணு சாதனங்கள் வருகையினால் இதுபோன்ற பொருட்களின் தேவை குறைந்து உள்ளது என்பதையும் குறிப்பிட்டு உள்ளார்.