கொரோனா வைரஸ்: சீனாவிற்கு நம்பிக்கையளிக்கும் சுவீஸ் நாட்டின் பழைய மருந்து…!

Read Time:3 Minute, 22 Second

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 95 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்து உள்ளனர். உலக நாடுகள் கொரோனாவிற்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வைரசுக்கு எதிரான மருந்தை கண்டுபிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால், 8 மாதங்களாவது மருந்து கண்டுபிடிக்க ஆகும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சீனாவிற்கு நம்பிக்கையளிக்கும் விதமாக 10 ஆண்டுகளுக்கு முந்தைய மருந்து உதவுகிறது.

கடுமையான சிக்கல்களை எதிர்க்கொள்ளும் கொரோனா வைரஸ் (COVID-19) நோயாளிகளுக்கு அழற்சி எதிர்ப்பு மருந்து ஆக்டெம்ராவை பயன்படுத்த சீனா அங்கீகரிக்கிறது. சில பழைய மருந்துகள் கடுமையான சைட்டோகைன் வெளியீட்டு நோய்க்குறியை (சிஆர்எஸ்) நிறுத்தக்கூடும் என்று சீனா நம்புகிறது. கொரோனா வைரஸ் நோயாளிகளில் பேரழிவு தரும் உறுப்பு செயலிழப்பு மற்றும் இறப்புக்கு பின்னால் ஒரு முக்கிய காரணியாக கருதப்படும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் அதிகப்படியான தாக்கம் காரணமாக இம்மருந்துகளை பயன்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸிலிருந்து கடுமையான சிக்கல்களை உருவாக்கும் நோயாளிகளுக்கு சுவிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனமான ரோச்சின் அழற்சி எதிர்ப்பு மருந்து ஆக்டெம்ராவை பயன்படுத்த சீனா ஒப்புதல் அளித்துள்ளது. ஆக்டெம்ரா, அமெரிக்காவில் முடக்கு வாதம் (ஆர்.ஏ)-க்கு 2010-ல் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உயிரியல் மருந்தாகும். சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் புதன்கிழமை ஆன்லைனில் வெளியிடப்பட்ட சிகிச்சை வழிகாட்டுதல்களில், ஆக்டெம்ரா இப்போது கடுமையான நுரையீரல் பாதிப்பு மற்றும் அதிக ஐ.எல் -6 ( Interleukin 6 (IL-6)) அளவை கொண்ட கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படலாம் என்று கூறியுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் 14 மில்லியன் யுவான் (2.02 மில்லியன் டாலர்) மதிப்புள்ள ஆக்டெம்ராவை நன்கொடையாக சுவிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் ரோச் சீனாவிற்கு வழங்கியுள்ளது. இருப்பினும், சோதனைகளும் தொடர்கிறது என்றே தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவீஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் அமெரிக்காவிற்கு பின்னர் சீனாவை அதன் நம்பர் 2 சந்தையாக இருக்கும் என நம்புகிறது. கொரோனா வைரஸை அழிக்கும் மருந்தை கண்டுபிடிப்பதிலும் தீவிரம் காட்டுகிறது.