இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்து உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும், அவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்திருந்தாலும் அவர்களுக்கு இந்த நோய் தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் செய்தித்துறை வெளியிட்டுள்ள தகவலில், கொரோனோ வைரஸ் நோய் தொற்று மேலும் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தாய்லாந்து மற்றும் மலேசியாவில் பயணம் மேற்கொண்டவர் ஆவார். மருத்துவமனையின் தனிமை பகுதியில் சிசிக்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை சீராக உள்ளது. இதையும் சேர்த்து நாட்டில் நோய் தொற்று 31 பேருக்கு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 16 பேர் இத்தாலிய நாட்டவர்கள்.
தற்போதைய உத்தரவின்படி அனைத்து சர்வதேச பயணிகளுக்கும், அவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்திருந்தாலும் அவர்களுக்கு இந்த கொரோனோ வைரஸ் நோய் தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. சோதனை செய்வதற்கான போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் 9 விமான நிலையங்களுக்கு இந்த சோதனை விரிவாக்கப்பட்டு உள்ளது. இதனையும் சேர்த்து இன்றைய நிலையில் மொத்தம் 30 விமான நிலையங்களில், வந்து சேரும் சர்வதேச பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
மேலும், கொரோனோ வைரஸ் குறித்த ஒரு நாள் தேசியப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மத்திய சுகாதாரம் குடும்பநல அமைச்சகமும் உலக சுகாதார அமைப்பும் இந்தப் பயிற்சியை இணைந்து நடத்துகிறது. இன்று டெல்லியில் சுகாதாரத்துறை செயலாளர் ப்ரீத்தி சூடன் இந்த பயிற்சியை தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், ரெயில்வே பாதுகாப்பு, துணை ராணுவ அமைப்புகள் ஆகியவற்றை சேர்ந்த மருத்துவமனைகளின் ஆகியவற்றின் சுகாதார அதிகாரிகள் 280 பேர் இப்பயிற்சியில் பங்கேற்கின்றனர். மெய்நிகர் வழியாக நாடெங்கும் உள்ள மையங்களில் மேலும் ஆயிரம் பேர் இப்பயிற்சியில் பங்கேற்கின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.