மலையாள பிரேமம் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அனுபமா பரமேஸ்வரன்.
கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவர். தற்போது தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்தபேட்டியில், இப்போதைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கை வித்தியாசமாக உள்ளது.

பேஷன் உலகத்தில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு, முன்னோர் வகுத்த வாழ்க்கையை பற்றி சிந்திக்கவே நேரம் இல்லை. பழைய பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்காமல் ஒதுக்குகிறார்கள். ஆனால் நான் அந்த ரகம் இல்லை. பழங்கால நடைமுறைகளை நம்புகிறேன். பெரியவர்கள் கருத்துகளை மதிக்கிறேன்.
மக்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று முன்னோர்கள் சில விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளார்கள். ஒவ்வொரு விதிமுறைகளுக்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. அதை நாகரிகம் என்ற பெயரில் புறக்கணிப்பது சரியல்ல. இளைய தலைமுறையினருக்கு புதிய விஷயங்கள் தெரிகிறது. அதற்காக பழைய நடைமுறைகளை ஒதுக்குவது கூடாது. நான் நடிகையான பிறகும் சொந்த வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்போதும் வீட்டில் இருக்கிறேன்.

ராகு காலம், அஷ்டமி, நவமி, நல்ல நேரம் போன்ற விஷயங்களை நம்புகிறேன். அவற்றை பெரியவர்கள் சும்மா சொல்லி வைக்கவில்லை. எல்லாவற்றை கடைப்பிடித்தால் ஒழுக்கமான வாழ்க்கையை வாழலாம். பழங்காலத்து நம்பிக்கைகளை பின்பற்றியே வாழ்க்கையை நகர்த்துகிறேன் எனக் கூறியுள்ளார்.