சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான டிரோன்…

Read Time:2 Minute, 12 Second

சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருவிகளை கண்டு பிடித்து வழங்கி வருகின்றனர்.

அதேபோல், நாட்டின் பாதுகாப்புக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை அவ்வப்போது வெளிகாட்டுகின்றனர். அந்த வகையில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான ஆளில்லா குட்டி விமானத்தை கண்டுபிடித்து சாதனை படைத்து இருக்கிறார்.

இதற்கு ‘ரோக் டிரோன்ஸ்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதனை வான்வெளி என்ஜினீயரிங் (ஏரோ ஸ்பேஸ் என்ஜினீயரிங்) துறை பி.டெக். இறுதி ஆண்டு மாணவர் வாசு குப்தா, அதே துறையின் திட்ட அதிகாரி ரிஷாப் வஷிஸ்தா, உதவி பேராசிரியர் ரஞ்சித் மோகன் ஆகியோரின் உதவியுடன் கண்டுபிடித்து இருக்கிறார்.

ஆளில்லா குட்டி விமானத்தை கொண்டு எதிரிகள் முக்கிய இடங்களில் அசம்பாவித சம்பவங்களை நிகழ்த்துவதற்கு திட்டமிட்டு பறக்கவிட்டால், அதனை தற்போது மாணவர் கண்டுபிடித்து இருக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான குட்டி விமானம் தடுத்து நிறுத்தி, அதில் செய்யப்பட்டு இருக்கும் ‘புரோகிராமை’ மாற்றி பாதுகாப்பாக தரையிறங்க செய்துவிடும் அம்சம் கொண்டது.

இந்த தொழில்நுட்பத்திலான ஆளில்லா குட்டி விமானம் நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு அவசியமான ஒன்றாக இருக்கும் என்றும், நாட்டின் பாதுகாப்பை இது மேலும் வலுப்படுத்தும் என்றும் இதனை கண்டுபிடித்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக மத்திய அரசுடனும் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.