கொரோனா வைரஸ் பரவல்: 40 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டதா…?

Read Time:4 Minute, 1 Second

கொரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவுவது ஏற்கனவே கணிக்கப்பட்டதா? என்ற கேள்வி எழும் வகையில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் வைரஸ் சீனாவின் பயோ வாரா? என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கிடையே வைரஸ் விலங்குகளிடம் இருந்து பரவியது தொடர்பான பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.

இந்நிலையில் புதிய தகவலாக வைரஸ் ஏற்கனவே கணிக்கப்பட்டது என புத்தகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

40 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகம்

‘தி ஐஸ் ஆப் டார்க்னஸ்’ (The Eyes of Darkness) என்ற நாவல் புத்தகம் அமெரிக்க எழுத்தாளர் டீன் கூன்ட்ஸால் எழுதப்பட்ட இந்த மர்ம நாவல் 1981-ம் ஆண்டு வெளியானது. இந்த புத்தகத்தில் 39-வது அத்தியாயத்தில் ‘உகான் 400 வைரஸ்’ என ஒரு வைரஸ் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரத்தில்தான் முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவியது.

‘தி ஐஸ் ஆப் டார்க்னஸ்’ நாவலின் கதை ‘உகான் 400 வைரஸ்’ ஒரு ஆய்வகத்தில் பயோ ஆயுதமாக உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கிறது. இந்த புத்தகத்தின் பகுதிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, “கொரோனா வைரஸ் சீனர்களால் உகான் – 400 என்று அழைக்கப்பட்ட ஒரு உயிரியல் ஆயுதமா? இந்த புத்தகம் 1981-ல் வெளியிடப்பட்டது.” என்று தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டார். இதனையடுத்து இந்த புத்தகத்தின் பக்கங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த நாவலின் கதைக்களம்: இளைஞர் ஒருவர் ஒரு சிறு குழுவுடன் மலையேற்றத்திற்குச் செல்கிறார். மலையேற்றத்துக்குச் சென்ற அனைவரும் மரணித்துவிட்டதாகத் தகவல் வருகிறது. உடைந்து போகும் அந்த இளைஞரின் தாய் இதுதான் விதி என நடந்ததை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் சில நாட்களில் தனது மகன் இறக்கவில்லை என்பதை சில சமிக்ஞைகள் மூலம் அந்த தாய் உணர்கிறார். பின் அவர் தனது மகனைத் தேடி செல்கிறார் என்பதாகும் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

‘எண்ட் ஆப் டேஸ்’

2020-ல் கொரோனா வைரஸ் வெடிக்கும், கொடூரமான தன்னுடைய கரங்களால் கரங்கள் உலகையே சுற்றி வளைத்து ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கும் எனவும் 12 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘எண்ட் ஆப் டேஸ்’ புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2008-ம் ஆண்டு வெளியான இந்த புத்தகத்தில் 312-வது பக்கத்தில் இதுதொடர்பான தகவல் இடம்பெற்று உள்ளது. 2013-ல் மறைந்த பிரபல எழுத்தாளர் சில்வியா பிரவுன் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

End of Days: Predictions and Prophecies about the End of the World என்ற நாவலில், 2020 வாக்கில் நிமோனியா போன்ற ஒரு நோய் உலகம் முழுவதும் பரவும். நுரையீரல்களையும், சுவாச குழாய்களையும், பாதித்து அது பலருக்கு எமனாக மாறும்.. எந்த மருந்தாலும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். அதுபோல, எவ்வளவு வேகத்தில் இந்த நோய் பரவுமோ, அதே வேகத்தில் அது மறைந்து விடும். ஆனால், 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வரும். பின்னர் முற்றிலும் மறைந்து போகும் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.