தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கே.சண்முகம் அவசர கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக தகவல் வந்துள்ளதை தொடர்ந்து சில அறிவுரைகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் தங்களின் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் டாக்டர்களை உடனடியாக அழைத்து பேச வேண்டும்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் திட்டங்கள் தொடர்பாக அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
அனைத்து மாவட்ட தலைமையக மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் இந்த நோய்க்கான தனி அறைகள் ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். மருத்துவமனையில் அனைத்து நோயாளிகள், அவர்களை கவனித்து கொள்பவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் கண்டிப்பாக சானிடைசர் என்ற சுத்திகரிப்பு திரவத்தினால் கைகளை கழுவ வேண்டும். இந்த திரவம் 70 சதவீத ஆல்கஹால் கொண்டதாக இருக்க வேண்டும்.
மருத்துவமனையை விட்டு வெளியே செல்பவர்களின் கைகளும் அந்த வகையில் சுத்தப்படுத்தப்பட வேண்டும். இதற்கான வசதிகளை மருத்துவமனைகளில் ஏற்படுத்தி தரவேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வி, உயர் கல்வி, போலீஸ், வருவாய் ஆகிய பல்வேறு மாநில அரசு துறைகள் மற்றும் ரெயில்வே, விமான நிலையம், துறைமுகம், பாதுகாப்புத்துறை ஆகிய மத்திய அரசு துறை அதிகாரிகள் அடங்கிய மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மருத்துவமனைகளை தயார்படுத்துதல், சுத்தமான காற்றை சுவாசிக்கும் நிலை, கைகளை சுத்தமாக வைத்திருத்தல், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட வேண்டும்.
சுத்தமான சுவாசம், சுத்தமான கைகள், ஒரு சதவீத ஹைப்போசியோரைட் அல்லது 5 சதவீத லைசால் ஆகியவற்றை பயன்படுத்தி கைகள் அடிக்கடி வைக்கப்படும் இடங்களை கழுவுவது போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட வேண்டும்.
இதற்கான பணிகளுக்கு பெண்கள் சுய உதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அதுபற்றிய துண்டுப் பிரசுரங்கள் விரிவான அளவில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அனைத்து மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், கண்காட்சி நிகழ்ச்சிகள், ஆட்சியர் அலுவலகம் போன்ற பொது இடங்களில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் கை சுத்திகரிப்பு திரவங்கள் வைக்கப்பட வேண்டும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை கிராம அளவில் ஏற்படுத்த வேண்டிய அவசியம். கொரோனா வைரஸ் தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஒவ்வொரு ஆட்சியரும் தங்களை தனிப்பட்ட முறையில் ஈடுபடுத்தி கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.