கொரோனாவால் பயப்பட வேண்டாம்… இந்தியாவில் 80% நோயாளிகள் தாங்களாகவே குணமடைவார்கள் என விஞ்ஞானி தகவல்.!

Read Time:4 Minute, 43 Second

இந்தியாவில் கொரோனாவால் பயப்பட வேண்டாம், 80% நோயாளிகள் தாங்களாகவே குணமடைவார்கள் என்று இந்திய விஞ்ஞானி டாக்டர் ககன்தீப் காங் தகவல் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் முன்னணி மருத்துவ ஆராய்ச்சியாளரான ககன்தீப் காங், குழந்தைகளுக்கு ஏற்படும் வைரஸ் தொற்று மற்றும் ரோட்டாவைரஸ் தடுப்பூசி பணிகளில் முன்னோடி ஆராய்ச்சியாளராக உள்ளார். குழந்தைகளுக்கு ஆரம்ப வருடங்களில் ஏற்படும் நோய்கள், சுகாதாரமின்மை, தண்ணீர் பாதுகாப்பின்மை ஆகியவற்றின் காரணமாக ஏற்படும் தொற்று நோய்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளார்.

இவரின் தடுப்பூசி ஆராய்ச்சி, உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசிகள் முதல்கட்ட தரத்தேர்வுகளில் வெற்றிபெற உதவியிருக்கின்றன.

“எந்தத்துறையிலும் தடைகளை சந்திப்பதை தவிர்க்க இயலாது. மனம் தளராது பணிபுரியும்போது நமக்கு தேவையான உதவி தானாகவே நம்மை வந்தடையும்’’

என தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிவரும் ககன்தீப் காங்,

லண்டன் நகரில் செயல்பட்டு வரும் ராயல் சொஸைட்டியில் இடம்பெற்ற முதல் இந்திய பெண்மணியாவார். பரிதாபாத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் நிர்வாக இயக்குனராக பணியாற்றிவரும் டாக்டர் ககன்தீப், கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மீடியாவுக்கு பேட்டியளித்து பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், சாதாரண சளி மற்றும் காய்ச்சல் போன்று தான் கொரோனா வைரஸ் அறிகுறியும் இருக்கும். இதில் எந்த வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியாது. சிலருக்கு சளி மற்றும் இருமல் காணப்டலாம். அதனுடன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் போது வயிற்றுப்போக்கு, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழப்பும் நேரிடுகிறது.

திடீரென சளி தொந்தரவு ஏற்பட்டு காய்ச்சல் கடுமையாக இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம். குறிப்பாக நீரிழிவு, ரத்தகொதிப்பு, இதய நோய் அல்லது வயதானவர்களாக இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. இதற்கும் காய்ச்சலுக்கான சிகிச்சைகளே மேற்கொள்ளப்படும். சிறியவர்களை விட பெரியவர்களையே கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகப் பாதிக்கிறது. அதே சமயம், சளி மற்றும் காய்ச்சல் இருப்பவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்வது என்பது முடியாத விஷயம்.

எனவே, கொரோனா பாதித்த பகுதிகளுக்கு சென்று வந்தவர் அல்லது கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன பழகியவர்கள் போன்றவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். மற்ற காய்ச்சல், சளி போன்றே கொரோனா வைரஸ் தொற்றும், நான்கில் ஒருவருக்கு தானாகவே குணமாகும். ஒரு சிலருக்கு மட்டுமே தீவிர சிகிச்சை தேவைப்படும். பரிந்துரைக்கப்படும் போதுதான் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படும் 80% நோயாளிகள் தாங்களாகவே குணமடைவார்கள். அனைத்து சிகிச்சையும் கொரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்தக்கூடியவை கிடையாது. ஆனால், அதற்கு துணை புரிகிறது. காய்ச்சல் மற்றும் இருமலுக்கான பாராசிட்டமால் போன்ற மருந்துகளை தவிர வேறு எதுவும் தேவையில்லை. உங்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் நேரிட்டால் விரைவில் மருத்துவரை சந்திக்கலாம். கொரோனாவில் இருந்து தப்பிக்க கைகளை நன்றாக கழுவவேண்டும், கைகளை கழுவாமல் முகத்தை தொடக் கூடாது, சுகாதரமாக இருப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.