சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிந்தது.. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 20-ல் தூக்கு!

Read Time:4 Minute, 18 Second

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வருகிற 20-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் 4-வது முறையாக மரண வாரண்டு பிறப்பித்தது.

டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தவழக்கில் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதனை டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து மரண தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், மரண தண்டனையை எதிர்நோக்கி திகார் சிறையில் இருக்கும் 4 பேரும் ஒவ்வொருவராக மறு ஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது இதுவரை 3 முறை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

குற்றவாளிகளில் ஏற்கனவே முகேஷ் குமார் சிங், வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் ஆகிய மூவரின் கருணை மனுக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளியான பவன் குமார் குப்தா தரப்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவும் சமீபத்தில் நிராகரிக்கப்பட்டது. இத்துடன் குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டன. இதன் மூலம் அவர்களுக்கு இருந்த அனைத்து சட்ட உரிமைகளும் முடிவடைந்தது.

இதனை தொடர்ந்து டெல்லி சிறைத்துறை தரப்பில் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கான புதிய தேதியை அறிவிக்க கோரிக்கை விடுத்து டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பிப்ரவரி 5-ம் தேதி விசாரித்த டெல்லி நீதிமன்றம், குற்றவாளிகள் அக்‌ஷய் குமார், பவன் குமார் குப்தா, முகேஷ் குமார் சிங், வினய் குமார் சர்மா ஆகிய நால்வரையும் வருகிற 20-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு சாகும் வரை தூக்கில் போட வேண்டும் என உத்தரவிட்டது. நிர்பயா வழக்கில் மரண வாரண்டு பிறப்பிக்கப்பட்டிருப்பது இது 4வது முறையாகும்.

ஏற்கனவே, கடந்த ஜனவரி 22, பிப்ரவரி 1 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் அவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு மரண வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்ததும், மூன்று முறையும் பல்வேறு சட்டரீதியான காரணங்களால் அவர்களை தூக்கில் போடுவது ஒத்திவைக்க நேரிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட உத்தரவிடக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் பிப்ரவரி 5-ம் தேதி தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இவ்வழக்கு விசாரணையின் போது டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றம், 20-ம் தேதி குற்றவாளிகள் தூக்கில் போடப்பட்டால் இந்த மனு தானாகவே செயலிழந்து விடும். அப்படி ஏதாவது காரணத்தால் அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றால் அவர்களை தனித்தனியாக தூக்கில் போடுவது தொடர்பான இந்த மனுவின் மீது வரும் 23-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளது.