கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தை கொலை… மதுரையில் மீண்டும் தலையெடுக்கும் பெண் சிசுக்கொலை…

Read Time:3 Minute, 36 Second

மதுரை அருகே செக்கானூரணி புள்ளநேரி கிராமத்தை சேர்ந்த பழ வியாபாரியான வைரமுருகன் என்பவரது பெண் குழந்தை, பிறந்த 1 மாதத்தில் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில் 2-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் பெற்றோரே குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து வைரமுருகன், அவரது மனைவி சவுமியா மற்றும் வைரமுருகனின் தந்தை சிங்கம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்ந்து விசாரணை நடக்கிறது.

பெண் குழந்தைகள் கள்ளிப்பால் மற்றும் எருக்கம்பால் கொடுத்து கொலை செய்த சம்பவங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் பல வருடங்களுக்கு பின்னர் அதே பாணியில் கொலை சம்பவம் அரங்கேறி இருப்பது மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்து உள்ளது.

இதனை முளையிலேயே கிள்ளி எறிய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலதரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்தி அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் பேசுகையில், உசிலம்பட்டி பிராந்தியத்தில் நிலவிய பெண் சிசுக்கொலை நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் தோன்றியுள்ளது. பெற்றோர் ஒரு பெண் குழந்தையை விரும்பவில்லை என்றால், அவர்கள் அதை எப்போதும் அரசு மருத்துவமனைகளில் அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடியும், மேலும் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் குழந்தைகளை கவனித்துக்கொள்வார்கள். எனக் கூறியுள்ளார். பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகள் குறித்து உசிலம்பட்டியில் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான செயல் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 2018-ல், உசிலம்பட்டி அருகே கர்ப்பத்தை கருக்கலைக்கும் முயற்சியில் மூன்று சிறுமிகளின் தாயான ஒரு பெண் இறந்தார். அப்பெண்ணின் வயிற்றில் வளர்வதும் பெண் குழந்தைதான் என்று செவிலியர் நம்ப வைத்துள்ளார். மேலும் கருக்கலைப்பு செய்ய உதவுவதாக உறுதியளித்துள்ளார். அவர் ஒரு ஊசி போட்ட பிறகு, அந்த கர்ப்பிணி பெண் இறந்துவிட்டார் மற்றும் பிரேத பரிசோதனையில் கரு ஒரு ஆணின் என்று தெரியவந்தது. மறைமுகமான முறையில் பெண் குழந்தைகளை அழிக்கும் செயல் அங்கு தொடர்ந்து நடக்கிறது என்பதையே செய்திகள் காட்டுகிறது. தமிழக அரசு இவ்விவகாரத்தில் ஸ்திரமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது பலதரப்பு கோரிக்கையாக உள்ளது.