ஈரானில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்; பலி எண்ணிக்கை 145 ஆக உயர்வு; உலக நாடுகளின் உதவியை கோரியது

Read Time:1 Minute, 40 Second

சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. சீனா, இத்தாலிக்கு அடுத்தப்படியாக ஈரானிலும் பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு வைரஸ் தொற்றுக்கு 21 பேர் இரையாகி இருப்பதை தொடர்ந்து மொத்த சாவு 145 ஆக உயர்ந்து விட்டது. இதேபோன்று வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் 5,823 ஆகி விட்டது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஈரான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்நாட்டில் உள்ள 31 மாகாணங்களிலும் ஏப்ரல் மாதம் முடிய அனைத்து பள்ளி, கல்லூகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல, சமூக, மத, விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து உள்ளதை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் ஆதரவை ஈரான் நாடி உள்ளது. இது தொடர்பாக ஈரானின் வெளியுறவு மந்திரி முகமது ஜாவேத் ஷெரிப் கூறுகையில், ‘கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதற்கு இந்த பிராந்தியமும், ஒட்டுமொத்த உலக நாடுகளும் தோள் கொடுத்தால் மட்டுமே ஈரானால் இந்த போராட்டத்தில் வெற்றி பெற முடியும். நாம் இணைந்து வெற்றி பெறுவோம் அல்லது இணைந்து தோல்வியடைவோம்’ என்றார்.