கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது…! இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக உயர்வு!

Read Time:2 Minute, 2 Second

சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவில் முதலாவதாக சீனாவிலிருந்து ஜனவரி இறுதியில் திரும்பிய மூன்று கேரள மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையால் குணப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மார்ச் தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் நேற்று வரையில் வைரசினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக இருந்தது.

இந்நிலையில் இன்று கேரளாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஐந்து பேரும் கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்து உள்ளார். இவர்களில் மூன்று பேர் பிப்ரவரி 29-ம் தேதி இத்தாலியில் இருந்து திரும்பியவர்கள் என்றும் இரண்டு பேர் அவர்களுடைய உறவினர்கள் எனவும் தெரிவித்து உள்ளார். அவர்கள், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கேரளாவில் மூன்று பேர் குணமடைந்த நிலையில், தற்போது 5 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாநில அரசு தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.