கொரோனா வைரஸ் தமிழகத்துக்குள்ளும் நுழைந்தது: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு

Read Time:3 Minute, 49 Second

சீனாவின் உகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அந்த நாட்டை மட்டுமின்றி உலகையும் மிரட்டி வருகிறது.

இதனால் வைரஸ் பரவலை தடுக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனாவிலிருந்து வைரஸ் இந்தியாவிற்குள் நுழைந்துவிடாததில் முதல்கட்டமாக வெற்றியை இந்திய கண்டநிலையில், மற்ற நாடுகள் வழியாக வைரஸ் உள்ளே நுழைந்து சவாலாகியுள்ளது. இந்தியாவில் 31 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. இதில் மூன்று பேருக்கு குணமாகிவிட்டது.

இந்நிலையில் ஓமனில் இருந்து தமிழகம் திரும்பிய காஞ்சீபுரம் என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர் சென்னை அரசு மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “ஓமனிலிருந்து சென்னை திரும்பிய 45 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளது. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். நோயாளி மருத்துவ சிகிச்சையில் நலமுடன் உள்ளார். தமிழக சுகாதாரத்துறை நிலைமையை சமாளிக்கும் வண்ணம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் பீதியடைய தேவை இல்லை” எனக் குறிப்பிட்டார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நாளில் இருந்து சென்னை விமான நிலையம் உள்பட தமிழகத்தில் உள்ள 4 முக்கிய விமான நிலையங்களில் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசின் அறிவுரையின்படி விமான நிலைய ஆணையகத்துடன் இணைந்து தமிழக பொது சுகாதார துறை டாக்டர்கள் பரிசோதனையை பலப்படுத்தப்பட்டு உள்ளது. நவீன கருவிகளுடன், கைகளை சுத்தம் செய்ய கூடிய கருவிகளும் வைக்கப்பட்டு உள்ளது.

தற்போது சீனா ஜப்பான், இத்தாலி, தென் கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால் அனைத்து விமானங்களிலும் பயணிகளும் கண்காணிக்கப்படுகின்றனர்.

இதேபோன்று லடாக்கை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தாக்குதல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஈரான் சென்று வந்த இவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் 3 பேரையும் சேர்த்து இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து உள்ளது. இதற்கிடையே கொரோனா பாதித்த 2 அமெரிக்கர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்றிருந்தது தெரியவந்து உள்ளது. அந்த இடங்களில் அவர்களுடன் பழகியவர்கள் சுமார் 150 பேர் தனி முகாமில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.