தென்இந்தியாவின் வெப்பமான வானிலை கொரோனா பரவுவதை நிறுத்துமா…?

Read Time:4 Minute, 52 Second

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவும் நிலையில் தென் இந்தியாவில் காணப்படும் வெப்பமான வானிலை அதனை தடுத்து நிறுத்துமா? என்ற கேள்வி அதிகமாக எழுகிறது.

முந்தைய காலக்கட்டங்களில் வைரஸ் பரவிய போது அதனுடைய தாக்கம் வெயில் காலங்களில் குறைந்தது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்துவதில் வானிலை ஒரு முக்கிய பங்கை கொண்டிருக்கலாம் எனக் கூறும் அவர்கள், சூரிய ஒளியின் தீவிரம் மற்றும் வெப்பமான வானிலை போன்றவை கோடை மாதங்களில் வைரசை அடக்கலாம் என்கிறார்கள். கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நிலையில் சூரியன் பிரகாசித்தால் அதற்கு கூடுதல் கால அவகாசம் மனிதர்களுக்கு கிடைக்கும் எனவும் நம்புகிறார்கள் ஆய்வாளர்கள்.

மருத்துவர்களின் கருத்து

டெல்லி இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் சுவாசப்பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர் ராஜேஷ் சாவ்லா இதுதொடர்பாக கூறுகையில், வைரஸ் உயிர் வாழ்வதையும், பரவலையும் தீர்மானிப்பதில் சுற்றுப்புறசூழல் முக்கிய காரணியாக உள்ளது. கொரோனா வைரஸ் குறைவான வெப்பநிலை மற்றும் ஈரப்பதமான நிலையில் அதிகமாவே வளரவே முயற்சி செய்கிறது. சூரிய ஒளி மற்றும் வெப்பநிலை 26, 27 டிகிரி செல்சியசுக்கு மேல் அதிகரிப்பது வைரசுக்கு சாதகமற்ற இரண்டு முக்கிய காரணியாக இருக்கும். சூரிய ஒளி வைரசின் வளரும் திறனை பாதியாக குறைக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, அவற்றின் ஆயுள் 2.5 நிமிடங்களாக குறுகும். தென்இந்தியாவில் வெப்பநிலை 25-32 டிகிரி செல்சியசுக்கு மேல் வரையில் இருக்கும், இது கொரோனா வைரஸின் பெருக்கத்திற்கு சாதகமாக இருக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்து உள்ளார்.

டெல்லி நொய்டாவில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இணை இயக்குநர் டாக்டர் மீனாட்சி ஜெயின் பேசுகையில், அதிகமான சூரிய வெயில், வெப்பம் இந்த கொரோனா வைரசை கொல்லும் ஆற்றல் கொண்டுள்ளது. வறண்ட மற்றும் வெப்பமான வானிலை வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டுவரும். வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை குறைக்க நல்ல காற்றோட்டம் அவசியமானது. தென் இந்தியாவில் இயல்பான வெப்பநிலை ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கிறது. அப்பகுதியில் கொரோனா நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்கிறார்.

அதிகமான வெயில் காரணமாக தென் இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கான வாய்ப்புகள் குறைவு என்பதுதான் நிபுணர்களின் கூற்றாக உள்ளது. இருப்பினும் கோடைகாலம் அல்லது குளிர்காலம் என்று பார்க்காமல் கொரோனா வைரஸ் பரவுவதை முடிந்தவரை கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். தென் இந்தியாவில் வெயில் அடிக்கும் நிலையில், வட இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் மழையும் பெய்து உள்ளது. வடகிழக்கிலும் குளிரான பருவநிலை ஏற்பட அவ்வப்போது வானிலை மாறுகிறது.

தென் இந்தியாவில் ஏற்கனவே கேரளாவில் மூன்று பேருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது. அவர்கள், குணம் அடைந்துவிட்டனர். தற்போது தெலுங்கானாவில் ஒருவருக்கும், தமிழகத்தில் ஒருவருக்கும், கேரளாவில் 5 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. இந்நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. பாதுகாப்பாக இருந்துக்கொள்ள முன்னெச்சரிக்கையாக சுகாதார நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். கைகளை சுத்தமாக வைத்திருக்க மிகவும் கவனம் செலுத்துங்கள்….