மாநிலங்களவை தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு, தே.மு.தி.க.வுக்கு ஏமாற்றம்…

Read Time:3 Minute, 15 Second

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 55 எம்.பி.க்களின் பதவி காலம் ஏப்ரல் 1-ம் தேதியுடன் முடிவடைகிறது.

தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.பி.க்கள் சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த், மேட்டுப்பாளையம் செல்வராஜ், முத்துக் கருப்பன், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.பி. டி.கே.ரங்கராஜன் ஆகிய 6 பேரும் அடங்குவார்கள். இந்த காலி பதவி இடங்களை நிரப்புவதற்கான மாநிலங்களவை தேர்தல் வருகிற 26-ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 13-ம் தேதி கடைசி நாளாகும். தற்போது தமிழக சட்ட சபையில் அ.தி.மு.க., தி.மு.க. வுக்கு உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில், இரண்டு கட்சிகளும் தலா 3 எம்.பி.க்களை தேர்ந்தெடுத்து மாநிலங்களவைக்கு அனுப்ப வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆகிய 3 பேர் கடந்த 1-ம் தேதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களாக மு.தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க. வுக்கு மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் வழங்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி இருந்தார். இதுதொடர்பாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தே.மு.தி.க. துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். இதேபோன்று புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும் வாய்ப்பு கேட்டதாக கூறப்பட்டது.
தற்போது தே.மு.தி.க.வுக்கு இடம் வழங்கப்படாதது அந்த கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் த.மா.கா. வுக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் வழங்கப்படும் என்று அ.தி.மு.க. தலைமை உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தற்போது ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் பா.ஜ.க. மேலிடம் கொடுத்த நிர்பந்தத்தால்தான் ஜி.கே.வாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.