மம்தாவின் கோட்டையை தகர்க்க பிரதமர் மோடி வியூகம்…!

Read Time:4 Minute, 21 Second
Page Visited: 53
மம்தாவின் கோட்டையை தகர்க்க பிரதமர் மோடி வியூகம்…!

மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 295 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் 211 தொகுதிகளில் வெற்றி பெற்று, மம்தா பானர்ஜி தலைமையில் அரசு அமைந்தது.

பா.ஜனதா 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 45 சதவீதமும், பா.ஜனதா 10 சதவீதமும் ஓட்டுகள் பெற்றன. ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 44 சதவீதமும், பா.ஜனதா 40 சதவீதமும் ஓட்டுகளை பெற்றன.

கிழக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு குறைந்து பா.ஜனதாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இருப்பினும் மேற்கு வங்காளத்தில் மட்டும் பா.ஜனதாவால் காலூன்ற முடியவில்லை. எனவே அடுத்த ஆண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற பா.ஜனதா குறிவைத்து உள்ளது. இதன்மூலம் மாநில அரசை கைப்பற்றுவதுடன், அதிகமான மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெறலாம், மாநிலங்களவை உறுப்பினர்களும் அதிகம் கிடைப்பார்கள் என பா.ஜனதா கருதுகிறது.

மம்தா பானர்ஜி, சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் கடுமையாக போராடி வருகிறார். எனவே வங்காள மொழி பேசும் இந்துக்களை கருத்தில்கொண்டு இந்துத்துவா மற்றும் வளர்ச்சி என்ற இலக்குடன் அந்த கனவை நிறைவேற்ற பா.ஜனதா முடிவு செய்து உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் இந்த வாய்ப்பை பிரதமர் மோடி மேற்கு வங்காள மாநிலத்தின் மீது வைத்திருக்கும் குறிக்கு பயன்படுத்தி கொண்டார்.

பிரதமர் மோடி அந்த மாநிலத்தின் பல எம்.பி.க்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி உள்ளார். மாநிலத்தில் வெற்றிபெறுவதற்கு பா.ஜனதா என்ன செய்ய வேண்டும். மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், எடுக்கப்பட்ட பல முக்கிய முடிவுகள் ஆகியவை குறித்து அங்குள்ள மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பது போன்ற பல விவரங்களை அவர்களிடம் பிரதமர் மோடி கேட்டறிந்து உள்ளார்.

இதுகுறித்து பிரதமரை சந்தித்த பா.ஜனதா தலைவர் திலீப் கோஷ் கூறும்போது, பிரதமர் மோடி ஒவ்வொரு எம்.பி.யையும் சந்திக்க முடிவு செய்து உள்ளார். அவர் பல்வேறு அரசியல் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். இது எங்களை ஊக்கப்படுத்துவதாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மக்களவையில் அதிக குரல் எழுப்பும் லாக்கெட் சட்டர்ஜி எம்.பி. கூறும்போது, மாநிலத்தில் வெற்றிபெறுவதற்கு பா.ஜனதா என்ன செய்ய வேண்டும்?. மத்திய அரசு பற்றியும், அதன் திட்டங்கள் குறித்தும் அங்குள்ள மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பிரதமர் கேட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார். உள்துறை மந்திரி அமித்ஷாவும் மேற்கு வங்காளத்தில் வெற்றிபெற தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %