அமெரிக்காவில் கொரோனாவிற்கு 38 பேர் சாவு; ஐரோப்பா உடனான தொடர்பை துண்டிக்கிறது…!

Read Time:1 Minute, 44 Second

அமெரிக்காவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

சீனாவிலிருந்து பிறநாடுகளுக்கு பரவிய வைரஸ் சங்கிலி தொடர்போன்று அனைத்து நாடுகளிலும் தன்னுடையை வேலையை காட்டி வருகிறது.

அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் 38 பேர் பலியாகி உள்ளனர்.

ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. வைரஸ் வேகமாக பரவுவதை தடுப்பதற்காக அங்குள்ள 11 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனையடுத்து அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐரோப்பா செல்ல, மற்றும் அங்கிருந்து வர பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஐரோப்பா செல்லும் மற்றும் ஐரோப்பாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் அடுத்த 30 நாட்களுக்குத் தடை செய்வதாக டொனால்டு டிரம்ப் அறிவித்து உள்ளார். “கொரோனா பாதிக்கப்பட்ட யாரும் எங்கள் நாட்டுக்குள் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த தடை,” என குறிப்பிட்டுள்ளார். இந்த தடை இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது. ஆனால், பிரிட்டன் செல்லவும், அங்கிருந்து வரவும் எந்த தடையும் கிடையாது. பிரிட்டனில் 460 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கும், 8 பேர் பலியாகியுள்ளனர்.