பாகிஸ்தானில் அமெரிக்கா வழங்கிய எப். 16 போர் விமானம் விழுந்து நொறுங்கியது…!

Read Time:3 Minute, 26 Second
Page Visited: 74
பாகிஸ்தானில் அமெரிக்கா வழங்கிய எப். 16 போர் விமானம் விழுந்து நொறுங்கியது…!

பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23-ந் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்த காலகட்டமான 1940 மார்ச் 23-ல் லாகூரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் கட்சி மாநாட்டில் இந்தியாவிடம் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற தனிநாடு அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நாள் அங்கு குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தான் தினம் என்றும் அழைக்கப்படும் இந்த நாளில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முப்படைகளின் அணிவகுப்பும், கலாசார நிகழ்ச்சிகளும் விமரிசையாக நடைபெறும்.

விரைவில் குடியரசு தினம் வரவுள்ளதால் முப்படைகளும் குடியரசு தின அணிவகுப்பாக தீவிர ஒத்திகையில் இறங்கியுள்ளன. பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மார்ச் 11-ம் தேதி சாகச ஒத்திகையில் ஈடுபட்டன. இதற்காக சென்ற எப்-16 ரக போர் விமானம் ஒன்றை விமானப்படையை சேர்ந்த விங் கமாண்டர் நவ்மான் அக்ரம் என்பவர் இயக்கி உள்ளார். சாகர்பரியான் என்ற இடத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.

இதில் விமானத்தில் இருந்த விங் கமாண்டர் நவ்மான் அக்ரம் சம்பவ இடத்திலேயே பலியானார் என அந்நாட்டு அரசு தரப்பு தெரிவித்து உள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை என்றும், இதுபற்றி தீவிரமாக விசாரிப்பதாகவும் அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த எப்-16 ரக போர் விமானங்களை பயங்கரவாதிகளை அழிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு விற்பனை செய்துள்ளது. இருப்பினும் 2019 பிப்ரவரி மாதம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நீடித்தபோது பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானங்கள் இந்திய வான்வெளிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது.

அப்போது, இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 பைசன் ரக போர் விமானத்தின் மூலம் விரட்டி சென்று, சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %