எஸ்பிஐ வங்கியில் இனி ‘மினிமம் பேலன்ஸ்’ தேவையில்லை…!

Read Time:2 Minute, 54 Second

எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில் மூன்று வகையான பிரிவுகளில் சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டியது உள்ளது. அதாவது பெருநகரங்களில் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில், மாதம் ரூ.3 ஆயிரம் இருப்பு வைத்திருக்க வேண்டும். இத்தொகை சிறிய நகரங்களில் ரூ. 2 ஆயிரமாகவும், கிராம புறங்களில் ரூ. ஆயிரமாகவும் உள்ளது. இந்த குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு ரூ.15 வரை அபராதம் மற்றும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது.

தற்போது இந்நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதாவது இனி எந்தவிதமான குறைந்தபட்ச இருப்பு தொகையும் அதாவது ஜீரோ பேலன்ஸ் கணக்கை பராமரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோக எஸ்பிஐ வங்கி வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில் காலாண்டுக்கு ஒருமுறை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் எஸ்எம்எஸ் கட்டணத்தையும் விலக்கி கொள்வதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கிய அறிவிப்பாக வைப்பு தொகைக்கான வட்டியை குறைத்து எஸ்பிஐ அறிவித்துள்ளது. தற்போது சேமிப்பு கணக்குகளில் வைப்பு தொகைக்கு ரூ.1 லட்சம் வரை 3.25 சதவீதம் வட்டியும், ரூ.1 லட்சத்துக்கு அதிகமாக 3 சதவீதமும் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இது மாற்றி அமைக்கப்பட்டு அனைத்து சேமிப்பு கணக்கு டெபாசிட்களுக்கும் ஒரே மாதிரியாக 3 சதவீத வட்டி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கி தலைவர் ரஜ்னிங் குமார் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்த அறிவிப்பின் மூலம் வாடிக்கையாளர்கள் இன்னும் மகிழ்ச்சி அடைவார்கள். இந்த அறிவிப்பின் மூலம் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கியுடன் வைத்திருக்கும் தொடர்பு இறுக்கமாகி, நம்பிக்கையை அதிகப்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. கடன் விகிதத்துக்கான இறுதிநிலை செலவு (எம்சிஎல்ஆர்) விகிதம் எஸ்.பி.ஐ.யில் குறைக்கப்பட்டு உள்ளது. இது,10 முதல் 15 புள்ளிகள் வரை மார்ச் 10-ம் தேதி முதல் குறைக்கப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்தது. இதன் மூலம் வங்கியில் வீட்டுக் கடன், வாகனக் கடன் பெறுவது அதிகரிக்கும்.