கனடா பிரதமர் மனைவிக்கு கொரோனா வைரஸ்…! டிரம்பை சந்தித்தவர்களுக்கும் கொரோனா…!

Read Time:3 Minute, 6 Second

சீனாவின் உகான் நகரில் தோற்றிய கொரோனா வைரஸ் உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, ஆயிரக்கணக்கானோரின் உயிரை குடித்துள்ளது.

ஏழை, பணக்காரன் என்று பாராமல், பாரபட்சமின்றி அனைவருக்கும் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ்.

சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. பலியானோர் எண்ணிக்கை, 897 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் தவிர பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. நாட்டின் தலைநகரான ரோமில் முக்கிய சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

தென்கொரியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்து உள்ளது. வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையும் 7 ஆயிரத்து 869 ஆக உயர்ந்துள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை அளிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

இதேபோன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசிய சிலருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உருவாக தொடங்கிய சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் உகான் நகரில் தினந்தோறும் சாவு எண்ணிக்கை அதிகரித்து வந்தநிலையில், தற்போது அங்கு பலியானோர் எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணாக குறைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா, கட்டுப்படுத்தக்கூடியது

இதற்கிடையே கொரோனா, கட்டுப்படுத்தக்கூடியது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ஜெப்ரேயிசஸ் ஜெனீவாவில் உலக நாடுகளின் தூதர்களுக்கு அனுப்பி உள்ள அறிக்கையில், ‘கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஆகும். அனைத்து நாடுகளும் உரிய தடுப்பு முறைகளை மேற்கொண்டால் கண்டிப்பாக இதனை கட்டுப்படுத்தலாம். ஆனால் சில நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது எங்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.