கொரோனா வைரஸ் பீதி: ஈரானில் தவிக்கும் 6 ஆயிரம் இந்தியர்கள்….

Read Time:2 Minute, 23 Second

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக, நாடாளுமன்ற மக்களவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ந்திரி ஜெய்சங்கர் பேசுகையில், ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. அங்கு 6 ஆயிரம் இந்தியர்கள் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களில் மராட்டியம், கா‌‌ஷ்மீர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 1,100 யாத்ரீகர்களும், 300 மாணவர்களும் அடங்குவர்.

முதலில், யாத்ரீகர்களை இந்தியாவுக்கு அழைத்துவர முன்னுரிமை கொடுத்து வருகிறோம். ஏற்கனவே, 58 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளனர். ஈரான் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் மற்ற இந்தியர்களையும் திருப்பி அழைத்து வருவோம். முதலில், இந்தியர்களை பரிசோதிப்பதற்காக, சுகாதார பணியாளர்கள் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இத்தாலியிலும் நிலைமை மோசமாக இருக்கிறது. கொரோனா பாதிப்பு இல்லாத இந்தியர்கள் இங்கு அழைத்து வரப்படுவார்கள்.

சர்வதேச கொரோனா வைரஸ் பாதிப்பு சூழ்நிலையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையிலான மந்திரிகள் குழுவும், மந்திரிசபை செயலாளர் தலைமையிலான செயலாளர்கள் குழுவும் கண்காணித்து வருகின்றன. கொரோனா பரவலை தடுக்க தடுப்பு நடவடிக்கை எடுப்பதுடன், வெளிநாட்டினருக்கு மின்னணு விசா, இந்தியாவுக்கு வந்தவுடன் பெறும் விசா ஆகிய வசதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தரைவழி எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. ஆகாயவழி மற்றும் கடல் வழி நுழைவுப்பகுதியிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு உள்ளன.

இந்தியர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே, இப்பிரச்சினையை நாம் பொறுப்புடனும், நிதானமாகவும் அணுக வேண்டும். பீதியை உருவாக்கக்கூடாது எனக் கூறியுள்ளார்.