கொரோனா வைரசுக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு.! 74 பேர் பாதிப்பு!

Read Time:2 Minute, 36 Second

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி உயிரிழப்பை எப்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ்க்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் 76 வயது முதியவர் சமீபத்தில் சவுதி அரேபியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால், ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். அவரது ரத்த பரிசோதனை ஆய்வறிக்கை வெளியாகாததால், அப்போது அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் தான் உயிர் இழந்தாரா? என்பது தெரியவரவில்லை.

இந்த நிலையில், அந்த முதியவரின் ரத்த பரிசோதனை அறிக்கை கர்நாடக சுகாதார துறைக்கு கிடைத்தது. அதில், அந்த முதியவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதன் காரணமாகவே மரணம் அடைந்ததாக கூறப்பட்டு உள்ளது. இது கொரேனா வைரசுக்கு இந்தியாவில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு ஆகும்.

இதற்கிடையே, சீனா, அமெரிக்கா, இத்தாலி, தென்கொரியா, ஈரான், ஜப்பான், மலேசியா, ஹாங்காங், சிங்கப்பூர், இந்தோனேசியா, ஸ்பெயின், பிரான்ஸ், வியட்நாம், நேபாளம், தாய்லாந்து ஆகிய 15 நாடுகளை சேர்ந்தவர்கள் டெல்லி விமான நிலையத்தின் ‘ஷாப்பிங்’ பகுதிக்குள் நுழைய இந்திய சுங்க இலாகா தடை விதித்துள்ளது. மேற்கண்ட நாடுகளுக்கு சென்று திரும்பிய இந்தியர்களும் அங்கு நுழைய அனுமதி கிடையாது.

மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் 13 பேருக்கு தொற்றி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்ததாக தெரிவித்துள்ளது. இவர்களில் 16 இத்தாலி சுற்றுலா பயணிகள், ஒரு வெளிநாட்டவர் ஆகியோரும் அடங்குவர். கேரளாவில் அதிகபட்சமாக 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.