மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா? 22 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

Read Time:2 Minute, 13 Second

மத்தியபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வலுவான தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்துவிட்டார். அவரது ஆதரவு மந்திரிகள் 6 பேர் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார். இதனால் அங்கு கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து உள்ளது.

இந்த நிலையில் ராஜினாமா செய்த 22 எம்.எல்.ஏ.க்களுக்கும் சட்டசபை சபாநாயகர் பிரஜாபதி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

சபாநாயகரை நேரில் சந்தித்து ஏன் ராஜினாமா கடிதத்தை வழங்கவில்லை?, தாங்களாகவே இந்த முடிவை எடுத்தீர்களா? அல்லது வேறு யாரும் நிர்பந்தம் செய்தார்களா? என நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதற்கிடையே கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, பட்ஜெட் கூட்டதொடர் தொடங்கவுள்ள வருகிற 16-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கவர்னர் லால்ஜி தாண்டன் மற்றும் சட்டசபை சபாநாயகரை சந்தித்து முறையிடப்போவதாக பா.ஜனதா தெரிவித்துள்ளது.

22 பேர் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 92 ஆக குறைந்துள்ளது. அதேசமயம், பா.ஜனதா எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 107 ஆக இருக்கும். பெரும்பான்மைக்கு 105 எம்எல்ஏக்களின் ஆதரவு போதும் என்ற சூழலில் பாஜவுக்கு 107 பேர் ஆதரவு உள்ளதால் அந்தக கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரும் என்று தெரிகிறது. கர்நாடகம் போன்று பதவி விலகிய எம்எல்ஏக்கள் மீண்டும் தேர்தல் நடக்கும்போது பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.