நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு தபாலில் வந்த ரூ.30 லட்சம் போதை மாத்திரைகள்..!

Read Time:2 Minute, 22 Second

நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு வெளிநாட்டு தபாலில் வந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக மைசூரில் உள்ள பல்கலைக்கழக மாணவரை கைது செய்தனர்.

ரூ.30 லட்சம் போதை மாத்திரைகள்

சென்னை விமான நிலைய வெளிநாட்டு தபால் நிலையத்துக்கு வரும் பார்சலில் பெரும் அளவில் போதை பொருள் வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. நெதர்லாந்தில் இருந்து வந்த பார்சல் ஒன்று சந்தேகப்படும்படியாக இருந்ததை கண்ட அதிகாரிகள் அதை சோதனை செய்தனர். அதில் திருமண ஆவணங்கள் இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது. உள்ளேயோ திருமண ஆவணங்களுக்கு பதிலாக நீல நிற மாத்திரைகள் அதிகமாக இருந்து உள்ளது. அதனை பரிசோதனை செய்ததில் மாத்திரைகள் புளு பனிஷோர் (Blue Punisher) என்ற ஒரு வகையான போதை மாத்திரைகள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த போதை மாத்திரைகள் அளவுக்கு அதிகமாக உட்கொண்டு இங்கிலாந்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரூ.30 லட்சம் மதிப்புள்ள 384 கிராம் எடைகொண்ட போதை மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்தனர். தபால், மைசூரில் உள்ள ஒரு அறிவியல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ரிஷிகேஷ் (வயது 23) என்பவருக்கு வந்தது என தெரியவந்தது. உடனடியாக ரிஷிகேசை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையின் போது ரிஷ்கேஷ், மைசூர், பெங்களூரு ஆகிய பகுதிகளில் நடந்துவரும் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இளைஞர்கள் இதுபோன்ற போதை மாத்திரைகளை அதிகம் விரும்புவதாகவும், மற்ற போதை பொருட்களை விட இது போன்ற போதை மாத்திரைகள் அதிக நேரம் நீடிப்பதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.