கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் பேரிடராக அறிவிப்பு.!

Read Time:2 Minute, 18 Second

சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்தியாவில் கொரோனா நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 16 பேர் இத்தாலியில் இருந்தும், ஒருவர் கனடாவில் இருந்தும் வந்த சுற்றுலா பயணிகள். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கர்நாடக மாநிலத்தில் 76 வயதான முதியவர் ஒருவரும், டெல்லியில் 68 வயது மூதாட்டி ஒருவரும் பலியாகி உள்ளனர்.

வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மும்முரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன.

மராட்டிய மாநிலத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்து இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்து இருப்பதாகவும், நாடு முழுவதும் 42 ஆயிரம் பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் சுகாதார நெருக்கடி நிலை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் பாதிப்பை பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெருந்தொற்று நோயான கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கப்படும், கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசுகளின் சார்பில் தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும், பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.