பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3 உயர்வு….

Read Time:2 Minute, 52 Second

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படுகிறது. சமீபகாலமாக கொரோனா வைரஸ் பாதிப்பினால் வர்த்தகம் தடைப்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்து வருகிறது. ஆனால் சர்வதேச விலை குறைவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை அதற்கேற்ற வகையில் இந்தியாவில் குறைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவியது.

இந்நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது. மத்திய மறைமுக வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.8 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.4 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, சாலை வரியும் லிட்டருக்கு தலா ரூ.1 உயர்த்தப்பட்டு ரூ.10 ஆக நிர்ணயிக்கப்படுகிறது” என கூறப்பட்டு உள்ளது.

தற்போதைய வரி உயர்வுடன் சேர்த்து மொத்தமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.22.98-ம், டீசலுக்கு ரூ.18.83-ம் கலால் வரியாக வசூலிக்கப்படுகிறது. இந்த வரி உயர்வின் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.39 ஆயிரம் கோடி கூடுதல் வருவாயாக கிடைக்கும். இந்த நிதி ஆண்டில் எஞ்சியுள்ள 3 வாரங்களுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் கோடிக்கு சற்று குறைவாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரி உயர்வு சமீபத்தில் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை சரிவு மூலம் சரி செய்யப்படுகிறது. இதனால் விற்பனை விலையில் உயர்வு இருக்காது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் முதல் 2016-ம் ஆண்டு ஜனவரி வரையில் மத்திய அரசு இதேபோல கச்சா எண்ணெய் விலை சரிவின் ஆதாயத்தை 9 முறை கலால் வரியை உயர்த்தியதன் மூலம் எடுத்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், மோடி அரசு கலால் வரி உயர்வை திரும்பப்பெற்று, கச்சா எண்ணெய் விலை சரிவு பலன்களை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.