செல்போன்களுக்கு ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக உயர்வு…

Read Time:2 Minute, 11 Second

டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் தலைமையில் 39-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மார்ச் 14-ம் தேதி நடைபெற்றது. இதில், மாநிலங்களின் நிதி மற்றும் வர்த்தகத்துறை மந்திரிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்ததும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிர்மலா சீதாராமன் பேசுகையில், செல்போன்கள் மற்றும் அதன் குறிப்பிட்ட பாகங்கள் மீதான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

மேலும், விமானங்கள் பராமரிப்பு, பழுதுபார்த்தல், முற்றிலும் மாற்றியமைத்தல் பணிக்கான வரி விகிதம் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரூ.2 கோடிக்கு குறைவாக வர்த்தகம் செய்யும் வணிகர்கள் 2018, 2019-ம் நிதியாண்டுகளில் தாமதமாக கணக்கு தாக்கல் செய்ததற்கான அபராதம் ரத்து செய்யப்படுகிறது. ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. செலுத்துவதற்கு தாமதமானால் மொத்த வரிக்கு வட்டி விதிக்கப்படும்.

2018-19-ம் நிதியாண்டின் கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். ஜி.எஸ்.டி. நெட்வொர்க்கை வடிவமைத்துள்ள இன்போசிஸ் நிறுவனத்திடம், ஜி.எஸ்.டி. திட்டத்தை குறையின்றி செயல்படுத்துவதற்காக ஜூலை மாதத்துக்குள் திறமைவாய்ந்த கூடுதல் ஊழியர்களை நியமிக்கவும், வன்பொருள் திறனை அதிகரிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளோம் எனக் கூறியுள்ளார். இதற்கிடையே செல்போனுக்கான வரி உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என துறை சார்ந்த நிறுவனங்கள் கூறுகின்றன.