அமெரிக்காவில் கொரோனாவை எதிர்த்து போராட ரூ. 3.65 லட்சம் கோடி

Read Time:2 Minute, 28 Second

உலக அளவில் கொரோனா என்ற வார்த்தையை கேட்டாலே பதறுகிற அளவுக்கு, அது உயிர்க்கொல்லியாக அமைந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் 1 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தாக்கி உள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்டு உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோயின் மையப்புள்ளியாக இப்போது ஐரோப்பா மாறி உள்ளது. குளிர்பிரதேசமாக காணப்படும் அங்கு வேகமாக வைரஸ் தொற்று பரவுகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவையும் இந்த வைரஸ் நோய் ஆட்டிப்படைக்க தொடங்கி உள்ளது.

அங்குள்ள 50 மாகாணங்களில் 46 மாகாணங்கள், கொரோனா வைரசின் ஆதிக்கப்பிடியில் சிக்கி திணறுகின்றன. 2 ஆயிரத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் நோய் தொற்றி உள்ளது. 47 பேர் இங்கு பலியாகி இருக்கிறார்கள். இங்கிலாந்து தவிர்த்து பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து யாரும் அமெரிக்காவில் நுழைய முடியாதபடி டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தடை 30 நாட்களுக்கு இது அமலில் இருக்கும். இந்நிலையில் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா வைரஸ் நோயை எதிர்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் தேசிய நெருக்கடி நிலையை அமல்படுத்தி உள்ளதாக அறிவித்தார்.

மத்திய அரசின் முழு அதிகாரத்தையும் கட்டவிழ்த்து விட நான் தேசிய நெருக்கடி நிலையை இன்று (மார்ச் 13) அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன் என்றார். ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி தேசிய நெருக்கடி நிலையை அமல்படுத்துவது என்பது அமெரிக்காவில் ஒரு அபூர்வமான நிகழ்வாக உள்ளது. அமெரிக்காவில் தேசிய அவசர நிலையை அறிவித்திருப்பதால் கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தை எதிர்த்து நின்று போராடுவதற்கு 50 பில்லியன் டாலர் நிதியை (சுமார் ரூ.3 லட்சத்து 65 ஆயிரம் கோடி) பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.